இறைச்சிக்காக லாரியில் அடைக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட பசுக்கள் மீட்பு
இறைச்சிக்காக லாரியில் அடைக்கப்பட்ட 60க்கும் மேற்பட்ட பசுக்கள் மீட்பு
ADDED : ஜூலை 29, 2026 11:44 PM
மைசூரு: இறைச்சிக்காக கன்டெய்னர் லாரிகளில், சட்ட விரோதமாக அடைத்து செல்லப்பட்ட, 60க்கும் மேற்பட்ட பசுக்கள் மீட்கப்பட்டன.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு பகுதியில் உள்ள இறைச்சி கூடத்திற்கு, இறைச்சிக்காக மாடுகள் சட்ட விரோதமாக, கன்டெய்னர் லாரியில் அடைத்து செல்லப்படுவதாக, காவலண்டே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் படி, நஞ்சன்கூடு - சாம்ராஜ்நகர் பிரதான சாலையில், போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த இரு கன்டெய்னர் லாரிகளில் சோதனை செய்தனர்.
அந்த இரு லாரிகளிலும், 60க்கும் மேற்பட்ட பசுக்கள் சட்ட விரோதமாக அடைத்து செல்லப்படுவதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, லாரியை ஓட்டி சென்ற இரு ஓட்டுநர்களும், கிளீனரும் போலீசாரிடமிருந்து தப்பி ஓடினர்.
போலீசார் விரட்டி பிடித்ததில், மைசூரை சேர்ந்த கிளீனர் சையத் ஜாவேத், 43, மட்டும் சிக்கினார். இரண்டு டிரைவர்களும் தப்பினர்.
சையத் மீது கர்நாடக கால்நடை படுகொலை தடுப்பு சட்டம் 2020ன் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரித்ததில், இந்த பசுக்களை தமிழகத்தின், தாளவாடி பகுதியிலுள்ள இறைச்சி கூடத்திற்கு கொண்டு செல்ல இருந்ததை ஒப்புக்கொண்டார். தப்பி ஓடிய இரண்டு டிரைவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பத்து லட்சம் ரூபாய் மதிப்புடைய, 60க்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் பிற கால்நடைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், அவற்றை ஏற்றி சென்ற இரண்டு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், காவலண்டே போலீஸ் இன்ஸ்பெக்டர் பசவராஜு நேற்று தெரிவித்தார்.
