ADDED : அக் 30, 2025 04:43 AM

மைசூரு: வயலில் பணியாற்றியபோது மின்சாரம் பாய்ந்து மகனும், அவரை காப்பாற்றச் சென்ற தாயும் உயிரிழந்தனர்.
மைசூரு மாவட்டம், ஹூன்சூரில் எம்மே கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் நீலம்மா, 42; இவரது மகன் ஹரிஷ், 20. நேற்று முன்தினம் காலை தங்களின் சோளத்தோட்டத்துக்கு மருந்து தெளிக்க இருவரும் சென்றனர்.
வயலுக்கு சென்றவர்கள், மாலை ஆகியும் திரும்பி வரவில்லை என்பதால் குடும்பத்தினர், அவர்களை தேடி வயலுக்கு சென்றனர்.
வயலுக்கு சென்று பார்த்தபோது, தாழ்வாக சென்ற மின்சார கம்பியின் கீழ் பகுதியில், ஹரிஷும், அவரது தாய் நீலம்மாவும் இறந்து கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஹூன்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசாரிடம் குடும்பத்தினரும், கிராமத்தினரும், 'உயர்மின் அழுத்த கம்பிகள், தாழ்வாக சென்றதாலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.

