ADDED : பிப் 02, 2026 04:54 AM
பாகல்கோட்: பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவின், ஹிரேமுச்சலகுட்டா கிராமத்தில் வசிப்பவர் ஹனுமந்த் பாதாமி, 33. இவருக்கும் ரூபா, 28, என்பவருக்கும், 2018ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு சம்ருத்தி, 5, என்ற மகளும், ப்ரீத்தம், 4, சுக்ரித், 2, என்ற மகன்களும் உள்ளனர்.
திருமணமான நாளில் இருந்தே, ரூபாவை மாமியார் ரேணவ்வா, பல விதங்களில் கொடுமைப்படுத்தினார். குழந்தைகள் பிறந்த பின்னும், மாமியார் திருந்தவில்லை. இவரது தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதனால் மனம் நொந்த ரூபா, நேற்று மதியம் தன் மூன்று குழந்தைகளை கயிற்றால் துாக்கிட்டு கொலை செய்த பின், தானும் டீசல் குடித்து, தற்கொலைக்கு முயற்சித்தார். மயங்கி கிடந்த இவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
பாகல்கோட் எஸ்.பி., சித்தார்த் அளித்த பேட்டி:
மூன்று குழந்தைகளை கொன்று, தாயும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், மாமியார், மாமனார் கொடுமை, கணவருடன் சண்டையே இதற்கு காரணம் என, தெரிகிறது. குறிப்பாக மாமனார், மாமியாரின் கொடுமை அதிகமாக இருந்ததாக கூறுகின்றனர்.
தற்கொலைக்கு முயற்சித்த தாய், தற்போது சிகிச்சையில் உள்ளார். அவரது உடல் நிலை குறித்து, டாக்டர்களிடம் தகவல் தெரிந்து கொண்டு, அப்பெண்ணிடம் விசாரணை நடத்துவோம். அதன்பின்னரே சம்பவத்துக்கு என்ன காரணம் என்பது, தெளிவாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
