பி.எம்.டி.சி., பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் மரணம்
பி.எம்.டி.சி., பஸ் மோதியதில் மகன் கண் முன் தாய் மரணம்
ADDED : மார் 18, 2026 06:00 AM

மாதநாயக்கனஹள்ளி: பி.எம்.டி.சி., பஸ் மோதியதில், ஐந்து வயது மகன் கண் முன் தாய் உயிரிழந்தார்.
யாத்கிர் மாவட்டம் சுரபுராவை சேர்ந்தவர் லட்சுமி, 30. பெங்களூரு ரூரல் மாச்சோஹள்ளியில் கணவர், ஐந்து வயது மகனுடன் வசித்தார். ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தார்.
இவரது மகனுக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொல்லரஹட்டி கிராசில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஊசி போட்ட பின், வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து நின்றனர்.
அந்த வழியாக வந்த பி.எம்.டி.சி., பஸ், லட்சுமி மீது மோதியது. கீழே விழுந்த அவர் மீது பஸ் சக்கரம் ஏறி, இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.
தாய் இறந்ததை பார்த்து மகன் கதறி அழுதான். இது அங்கிருந்தோரை கண்கலங்க செய்தது. பஸ் டிரைவரை, மாதநாயக்கனஹள்ளி போலீசார் கைது செய்தனர்.
