'போட்டோ ஷூட்'டில் தாய் 'பிசி' தண்ணீர் தொட்டியில் மகன் பலி
'போட்டோ ஷூட்'டில் தாய் 'பிசி' தண்ணீர் தொட்டியில் மகன் பலி
ADDED : பிப் 16, 2026 06:14 AM
நெலமங்களா: கர்ப்பிணி தாயின் போட்டோ ஷூட்டுக்கு சென்ற, இரண்டு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது.
பெங்களூரின், ஜெ.பி.நகரில் வசிப்பவர் சரண் ராஜ், 30. இவரது மனைவி ஸ்வாதி, 2 6. தம்பதிக்கு லட்சுமீர், 2, என்ற மகன் இருந்தார். இந்நிலையில் ஸ்வாதி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். தற்போது இவருக்கு எட்டு மாதங்களாகின்றன. இதனால் போட்டோ ஷூட் நடத்த விரும்பினார்.
கடந்த வாரம் பணி நிமித்தமாக சரண்ராஜ், வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். கணவரிடம் தகவல் கூறிய ஸ்வாதி, போட்டோ ஷூட் நடத்த தன் தோழியருடன், நெலமங்களாவின், கிட்டெனஹள்ளிக்கு நேற்று காலை வந்திருந்தார். தன் மகன் லட்சுமீரையும் அழைத்து வந்தார்,. மகனை விளையாட விட்டு விட்டு, அங்கு விதவிதமான போஸ்களில் போட்டோ எடுப்பதில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது விளையாடிய சிறுவன், அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழந்து மூழ்கி உயிரிழந்தான். சிறிது நேரத்துக்கு பின், மகனை காணாமல் தேடிய போது, தண்ணீர் தொட்டியில் கிடப்பது தெரிந்தது. தகவலறிந்து அங்கு வந்த மாதநாயகனஹள்ளி போலீசார், சிறுவனின் உடலை மீட்டனர்.
நடந்த அசம்பாவிதத்துக்கு, தாயின் அலட்சியமே முக்கிய காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்ணீர் தொட்டி இருப்பது தெரிந்தும், மகனை கவனிக்காமல் போட்டோ ஷூட்டில் மூழ்கியிருந்தார்.
இது குறித்து, வெளி நாட்டில் உள்ள தந்தைக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறார்.
