/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஏமாற்றிய மகனுக்கு பாடம் புகட்டிய தாய்
/
ஏமாற்றிய மகனுக்கு பாடம் புகட்டிய தாய்
ADDED : ஜன 09, 2026 06:24 AM

துமகூரு: தன்னை ஏமாற்றி வீட்டை பறித்த மகனுக்கு, அதிகாரிகளின் உதவியுடன் தாய் பாடம் புகட்டினார். வீட்டையும் தக்க வைத்துக்கொண்டார்.
துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகாவின் பிளிதேவாலயா கிராமத்தில் வசிப்பவர் திம்மம்மா, 90. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. கணவர் காலமான பின் மகன், மருமகளுடன் திம்மம்மா வசிக்கிறார். வீடு இவரது பெயரில் இருந்தது.
இவரது மகன் கிருஷ்ண ராஜு, 70, பொய்யான ஆவணங்களை உருவாக்கி, வீட்டின் பட்டாவை தன் பெயருக்கு மாற்றிகொண்டார். அதுமட்டுமின்றி, தாயை வீட்டை விட்டு விரட்டினார். மகளின் வீட்டில் அடைக்கலம் பெற்ற திம்மம்மா, தன் வீட்டை மீட்டு தரும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் ஆவணங்களை ஆய்வு செய்து, வீட்டை உரியவரிடம் ஒப்படைக்கும்படி தாலுகா பஞ்சாயத்துக்கு உத்தரவிட்டது.
அதிகாரிகளும் ஆய்வு செய்த போது, மோசடி நடந்தது தெரிந்தது. அதன்பின் கிருஷ்ணராஜுவின் பெயரில் இருந்த பட்டாவை ரத்து செய்தனர். வீட்டை திம்மம்மாவிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறும்படி, அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், கிருஷ்ணராஜு சம்மதிக்காமல் முரண்டு பிடித்தார். அவரை வெளியேற்றி விட்டு, திம்மம்மாவிடம் வீட்டை கொடுக்கும்படி தாசில்தார் உத்தரவிட்டார்.
அதன்படி கிராம நிர்வாக அதிகாரி மகேஷ், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி திலீப், போலீஸ் அதிகாரிகளுடன், நேற்று முன் தினம் பிளிதேவாலயா கிராமத்துக்கு வந்தனர். கிருஷ்ணராஜுவையும், அவரது மனைவி, மகளை வெளியேறும்படி கூறினர்.
ஆனால், கிருஷ்ணராஜு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். அதன்பின் அதிகாரிகள், அவரை பலவந்தமாக வீட்டில் இருந்து வெளியேற்றினர். திம்மம்மாவிடம் வீட்டை கொடுத்தனர்.

