சமூக வலைதளங்களில் வதந்தி 'பங்க்'களில் குவிந்த வாகன ஓட்டிகள்
சமூக வலைதளங்களில் வதந்தி 'பங்க்'களில் குவிந்த வாகன ஓட்டிகள்
ADDED : மார் 25, 2026 06:58 AM

பெலகாவி: பெலகாவியில் இரண்டு நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்காது என வதந்தி பரவியதால், பெட்ரோல் பங்க்களில் வாகன ஓட்டிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெலகாவி மாவட்டத்தில், இரண்டு நாட்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்காது என, நேற்று முன்தினம் இரவு சமூக வலைதளங்களில்வதந்திகள் பரவின. இதை நம்பிய வாகன ஓட்டிகள் நேற்று அதிகாலையே பெட்ரோல் பங்க்களில் குவிந்தனர்.
குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். இதனால், பெட்ரோல் பங்க்களில் பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, பெலகாவியின் அஜாம் நகர், காந்தி நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்களில் எரிபொருள் இல்லை என பலகைகள் வைக்கப்பட்டன.
இது, வாகன ஓட்டிகளிடம் பீதியை ஏற்படுத்தியது. வாகன ஓட்டிகள் வேறு பெட்ரோல் பங்க்களை தேடி செல்ல துவங்கினர். சில பெட்ரோல் பங்க்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையே கைகலப்பும் நடந்தது. இது குறித்த, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதுகுறித்து, பெலகாவி மாவட்ட கலெக்டர் முகமது ரோஷன் கூறியதாவது:
பெலகாவி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் என, எதற்கும் தட்டுப்பாடு இல்லை. எரிபொருள் காலியான பெட்ரோல் பங்க்களில், அடுத்த ஐந்து மணி நேரத்திற்குள் எரிபொருள் நிரப்பப்படும்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் எரிபொருள் வினியோகிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பெட்ரோலை, தண்ணீர் பாட்டில், கேன்களில் தர அனுமதி கிடையாது.
சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். பெட்ரோல் பங்க்களுக்கு படையெடுத்து செயற்கையான தட்டுப்பாட்டை உண்டாக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
