UPDATED : மார் 12, 2026 06:07 AM
ADDED : மார் 12, 2026 05:38 AM

மைசூருமாவட்டத்தின், நகர்ப்பகுதிகளில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றில் கைலாச மலையும் ஒன்றாகும். அற்புதமான இடத்தை பற்றி தெரியாத காரணத்தால், சுற்றுலா பயணியர் அவ்வளவாக வருவது இல்லை.
பள்ளி, கல்லுாரிகளில் ஆண்டு தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் கோடை விடுமுறை துவங்கும். பலரும் குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலா செல்ல பிளான் போடுகின்றனர். மைசூருக்கு செல்லும் திட்டம் இருந்தால், கைலாச மலையை காண தவறாதீர்கள்.
மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின், ஹனகோடு கிராமம் அருகில் கைலாச மலை உள்ளது. இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இடமாகும்.
இயற்கை ஆர்வலர்கள், மலையேற்ற பிரியர்களுக்காகவே, இறைவன் உருவாக்கிய இடம் என்பதில், மாற்று கருத்தே இல்லை. ஆத்திகர், நாத்திகர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.
மன அமைதியின்றி தவிப்பவர்கள், கைலாச மலைக்கு வந்து இயற்கையை ரசித்தபடி, சிறிது நேரம் பொழுது போக்கினால், மனதுக்கு அமைதியுடன், நிம்மதியும் கிடைக்கும்.
மலையில் அபூர்வமான மரங்கள், மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகள், ஏராளமாக வளர்ந்துள்ளன. இதில் இருந்து வெளியேறும் பிராண வாயுவை சுவாசித்தால், நோய்கள் அண்டாது. ஆரோக்கியம் விருத்தியாகும்.
மலையில் ஆளுயரத்துக்கு நின்றுள்ள கற்பாறைகள், அதன் நடுவில் குடி கொண்டுள்ள கல்லுாரேஸ்வர சுவாமி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மலை மீது நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையான காட்சிகளை காணலாம். துாரத்தில் உள்ள மலைகள், நாகரஹொளே தேசிய பூங்காவும் தென்படும். கைலாச மலையை, கல்லுாரேஸ்வரா மலை என்றும் அழைக்கின்றனர்.
மலை மீது ஏறி செல்ல, சாலையில் இருந்து 70 படிகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஏறி சென்றால், 50க்கும் மேற்பட்ட சிறிதும், பெரிதுமான பாறைகள் தென்படுகின்றன.
மேலே செல்ல செல்ல, குளிர்ந்த காற்று வீசி, உடற் சோர்வை நீக்கும். மலை மீது இரண்டு பெரிய கற்பாறைகள், எந்த ஆதாரமும் இல்லாமல் நின்றுள்ளன. தொலைவில் இருந்து பார்க்கும் போது,இரண்டு பெரிய ஆமைகள் அமர்ந்திருப்பதை போன்று தென்படுகின்றன.
இந்த பாறைகளுக்கு நடுவே, கல்லுாரேஸ்வரா சிலை உள்ளது. இதை சுற்றிலும் 101 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
பாறை குகைக்குள் மற்றொரு லிங்கம் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள் நடக்கின்றன.
முந்தைய காலத்தில் இந்த கைலாச மலை, அடர்த்தியான வனமாக இருந்தது. புலிகளின் இருப்பிடமாக இருந்தது.
ஆனால் இப்போது வனப்பகுதி பெரும்பாலும் விவசாய நிலமாக மாறியுள்ளது. புலிகள் வசித்தன என்பதற்கு, இங்குள்ள குகைகளே சாட்சியாக உள்ளன.
எந்த விதமான சத்தமும் இல்லாமல், அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இதை பற்றி பலருக்கும் தெரியாததால், சுற்றுலா பயணியர் அவ்வளவாக வருவதில்லை. கோவில் இருப்பதால் பக்தர்கள் வந்து, தரிசனம் செய்கின்றனர்.
இயற்கை விரும்பிகளுக்கு தீனி போடும் சுற்றுலா தலமாக, கைலாச மலை விளங்குகிறது.
