பெண்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் எம்.பி., பசவராஜ் பொம்மை கருத்து
பெண்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் எம்.பி., பசவராஜ் பொம்மை கருத்து
ADDED : ஏப் 14, 2026 05:55 AM

கதக்: ''பெண்களுக்கு அதிக திறமையும், ஆர்வமும் உள்ளது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சமுதாயத்துக்கு தங்களின் பங்களிப்பை வழங்குவர்,'' என, பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
கதக்கில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெண்கள் அதிக திறன் உடையவர்கள்; அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், சமுதாயத்திற்கு பெரும்பங்கை வழங்குவர். சமுதாயத்தில் முன்னேறும் சக்தி, அவர்களுக்கு உள்ளது. எனவே அவர்களுக்கு தேவையான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
கதக், முன்டரகியின் மாணவி மஞ்சுளா, இரண்டாம் ஆண்டு பி.யு.சி.,யில் முதல் ரேங்க் பெற்றுள்ளார். ராஜ்யோத்சவா விருது சிறப்பானது என்றாலும், மாணவி மஞ்சுளா பெற்றுள்ள கவுரவமும், அதே அளவுக்கு சிறப்பானது.
நாட்டில் பல பெண்கள் திறன்களை பெற்றுள்ளனர். அந்த திறமைகள் வெளியே வராமல் மறைந்திருப்பது, வருத்தமான விஷயமாகும். அவர்களுக்கு அதிகமான வாய்ப்பு கிடைத்திருந்தால், சமுதாயம் மேலும் முன்னேறி இருக்கும்.
ஆண், பெண் என்ற பாகுபாடு பார்க்கக்கூடாது என, பசவண்ணர் அறிவுறுத்தியுள்ளார். அக்க மஹாதேவியின் தத்துவங்கள், சிந்தனைகள் இன்றைக்கும் தேவையானவை. என் தாய் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்து விளங்கியவர்.
ஆனால், அவர் ஏழாம் வகுப்புடன், கல்வியை நிறுத்த வேண்டி வந்தது. அதன்பின் அவர் பலரின் கல்விக்கு உதவினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
