அதிகாரிகள் தயாராக இருக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
அதிகாரிகள் தயாராக இருக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
UPDATED : அக் 30, 2026 12:00 AM
ADDED : அக் 29, 2026 11:07 PM

பெங்களூரு: ‘வார்டு ஒன்று’ இயக்கத்தின் கீழ் சாலை பள்ளம், குப்பை, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கு, அனைத்துத்துறை அதிகாரிகளும் தயாராக இருக்கும்படி ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் கூறி உள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் உள்ள ஐந்து மாநகராட்சிகளிலும், ‘வார்டு ஒன்’ இயக்கம், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் துவங்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் மூலம், குப்பை, குடிநீர், சாலை பள்ளம், தெரு விளக்கு, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பிரச்னைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்படும்.
இந்த இயக்கத்தை திறம்பட செயல்படுத்த பெஸ்காம், குடிநீர் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் வார்டு வாரியான பணித்திட்டங்களை தயாரிப்பர். இவர்கள் எந்த நாளில், எந்த வார்டுகளில், என்னென்ன மாதிரியான பணிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து, அந்தந்த துறையின் ஊழியர்களுக்கு அறிவுறுத்துவர்.
மேலும், சாலைகளில் பல நாட்களாக நின்றுகொண்டிருக்கும் பழுதான வாகனங்கள் அகற்றப்படும். இந்த வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தி மீட்டு செல்லவும். இல்லையெனில், வாகனங்கள் ஏலம் விடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
