/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தெரு நாய்களுக்கு உணவு நகராட்சி எச்சரிக்கை
/
தெரு நாய்களுக்கு உணவு நகராட்சி எச்சரிக்கை
ADDED : ஜூலை 26, 2025 04:49 AM
சிக்கமகளூரு: பெங்களூரில் தெரு நாய்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க முடிவு செய்து, மாநகராட்சி நிர்வாகம் சர்ச்சைக்கு காரணமானது. மற்றொரு பக்கம் தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு சிக்கமகளூரு நகராட்சி தடை விதித்துள்ளது.
சிக்கமகளூரு நகரில், சமீப நாட்களாக தெரு நாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது.
மூன்று நாட்களில் 35க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்தன. இதனால் நகராட்சி மீது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பிரச்னைக்கு தீர்வுகாணாத நகராட்சி, தெரு நாய்களுக்கு பொதுமக்கள் உணவளிக்கக் கூடாது என, தடை விதித்துள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, சிக்கமகளூரு நகராட்சி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
சிக்கமகளூரு நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இதற்கு பொது மக்கள் உணவளிப்பதே, முக்கிய காரணம். சாலைகளில் செல்வோரை கடிக்கின்றன. பல இடங்களில் வீடுகளில் மிச்சமாகும் உணவை, நாய்களுக்கு போடுகின்றனர்.
எந்த காரணத்தை கொண்டும், தெரு நாய்களுக்கு, பொது மக்கள் உணவளிக்கக் கூடாது. உணவளித்தால் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
வளர்ப்பு நாய்களை அவரவர் வீட்டு வளாகத்தில் கட்டிவைக்க வேண்டும். சாலைகளில் விடக்கூடாது.
சாலைகளில் விட்டு பொது மக்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக, நகராட்சிக்கு புகார் வந்துள்ளது. எனவே நாய்களால் மற்றவருக்கு தொந்தரவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.