ரூ.500 கூலி தராததால் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ரூ.500 கூலி தராததால் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 24, 2026 04:07 AM
உத்தர கன்னடா: நிலுவையில் உள்ள, 500 ரூபாய் கூலியை திருப்பி தராத ஒப்பந்ததாரரை கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, சிர்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி தாலுகாவின் கமடகேரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிஷ் சென்னையா. பூங்காக்கள், பொதுப்பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வந்தார்.
இவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் சென்னையா என்பவர் கூலி வேலை செய்து வந்தார்.
ஒரு முறை செய்த வேலைக்கு கூலி தராமல், மஞ்சுநாத்துக்கு ரவிஷ் சென்னையா, 500 ரூபாய் பாக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு முறையும் மஞ்சுநாத் இந்தப் பாக்கியை கேட்ட போது, இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இதேபோன்று கடந்தாண்டு ஆகஸ்ட், 8ம் தேதி, ரவிஷுக்கு போன் செய்த மஞ்சுநாத் பணம் கேட்டபோது, இரண்டு நாட்களில் தருவதாக உறுதியளித்தார். ஆனாலும், தரவில்லை.
பின், மீண்டும், 14ம் தேதி பணிக்கு வரும்படி ம ஞ்சுநாத்தை அழைத்தார். பாக்கி பணத்தை தந்தால் தான் வருவேன் என்று மஞ்சுநாத் கூறியதால், அவருக்கும், ரவிஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபமடைந்த மஞ்சுநாத், ரவிஷை இரும்பு கம்பியால் தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுதொடர்பாக ரவிஷ் மனைவி சேத்தனா போலீசில் புகார் அளித்தார். மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்த போது, ஏற்கனவே மாமனாரை கொலை செய்த வழக்கில், 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின் கூலி வேலைக்கு வந்தவர் என்பதும், கோபத்தில் மீண்டும் கொலை செய்து குற்றவாளியாகி உள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர் மீது சிர்சி நீதிமன்றத்தில், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மஞ்சுநாத்துக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
அத்துடன், ரவிஷின் மனைவிக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
