ADDED : ஏப் 13, 2026 01:23 AM
முல்பாகல்: முல்பாகல் நங்கிலி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஹலேகுப்பா கிராமத்தை சேர்ந்த வெங்கடம்மா, 50. என்பவர், தனது மகன் நாராயணப்பாவை காணவில்லை என்று நங்கிலி போலீஸ் நிலையத்தில், 1990 ஜனவரி 30ல் புகார் செய்தார். மறுநாள், அதே கிராமத்தின் பள்ளத்தாக்கில் நாராயணப்பா பிணமாக கிடந்தார்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் ெவளியானது. நாராயணப்பா, 24, அதே கிராமத்தை சேர்ந்த சீனப்பா, 26. என்பவரின் மனைவியுடன் கள்ளக் காதல் கொண்டிருந்தார். இதை, சீனப்பா பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் கள்ளக் காதல் தொடர்ந்தது. எனவே, இக்கொலையை சீனப்பா தான் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். இவ்வேளையில் போலீசுக்கு பயந்து சீனப்பா தலைமறைவானார்.
அண்மையில், போலீசில் தேங்கி இருக்கும் பழைய கோப்புகளை, கோலார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., கனிகா சிக்ரிவால் ஆய்வு செய்தார். முல்பாகல் நங்கிலி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுப் பிடிக்கவில்லை என்பதை கண்டு பிடித்தார். குழு அமைக்கப்பட்டது.
தேடப் பட்டு வந்த சீனப்பா, பெங்களூரு ஓட்டலில் வேலை செய்ததும், அதன்பின் ஆந்திர மாநிலம் குப்பம் என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருவதும், தெரியவந்தது. குப்பம் சென்ற போலீசார், அங்குள்ள போலீசார் உதவியுடன், நேற்று முன் தினம் சீனப்பாவை போலீசார் கைது செய்தனர்.
நேற்று கோலாரில் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்திய பின்னர், கோலார் சிறையில் அடைத்தனர். 36 ஆண்டுகளுக்கு பின், கொலையாளி கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
