/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மடத்தில் தியானம் செய்யும் முஸ்லிம் பெண்
/
மடத்தில் தியானம் செய்யும் முஸ்லிம் பெண்
ADDED : ஜூலை 26, 2025 11:00 PM

கொப்பால்: பிரபல ஹிந்து மடமான கவி மடத்துக்கு, முஸ்லிம் பெண்ணொருவர் தினமும் வருகிறார். ஒரு மணி நேரம் தியானம் செய்கிறார். இது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
கொப்பால் மாவட்டம், எலபுர்கா தாலுகாவின், குதரிமோதி கிராமத்தில வசிப்பவர் ஹசீனா பேகம். இவர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் சமையல் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் கடந்த எட்டு நாட்களாக, பிரசித்தி பெற்ற தீர்த்த தலமாக விளங்கும் கவி மடத்துக்கு வருகிறார்.
தினமும் மாலை நேரத்தில் மடத்துக்கு வருகிறார். மடாதிபதியை நமஸ்கரிக்கிறார். அதன்பின் இங்குள்ள நாகர் சிலை முன் அமர்ந்து, ஒரு மணி நேரம் தியானம் செய்துவிட்டு வீடு திரும்புகிறார். முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தும், ஹிந்து மடத்துக்கு பக்தியுடன் வருகை தந்து, ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறார். இவரது செயல் மத ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இது குறித்து, ஹசீனா பேகம் கூறியதாவது:
நான் கடந்த 13 ஆண்டுகளாக, கவி மடத்தை நம்பியுள்ளேன். என் மனதுக்கு நிம்மதி இருக்கவில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது.
இதை பற்றி மடத்தின் சுவாமிகளிடம் கூறினேன். அவரும் தியானம் செய்யும்படி ஆலோசனை கூறினார். எனவே அவரிடம் அனுமதி பெற்று கொண்டு, 11 நாட்கள் தியானம் செய்வதாக பிரார்த்தனை செய்து கொண்டேன்.
எட்டு நாட்களாக தியானம் செய்கிறேன். நான் முஸ்லிமாக இருந்தாலும், என்னை பொறுத்தவரை அனைத்து மதமும் ஒன்றுதான். நாகர், பசவண்ணரை பூஜிக்கிறேன். என் மனதுக்கு நிம்மதி கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.