ADDED : ஏப் 19, 2026 02:45 AM

புதிதாக தொழில் துவங்கும் சிலர், எதிர்பாராமல் நஷ்டம் அடைந்தால், அந்த தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு, வேறு தொழில் பற்றி ஆலோசிப்பர். ஆனால், மைசூரின் சகோதரர்கள், தோற்றும் மனம் தளராமல், அதே தொழிலை தொடர்ந்து வெற்றி அடைந்துள்ளனர். தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதை நிரூபித்துள்ளனர்.
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகாவின், கிராமப்புறத்தில் வசிக்கும் சகோதரர்கள் கிரண் மற்றும் சிவு. இவர்கள் பி.யு.சி., வரை மட்டுமே படித்துள்ளனர். சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டார். தாயே கஷ்டப்பட்டு மகன்களை வளர்த்தார். பி.யு.சி., வரை படித்த இவர்களால், அதற்கு மேல் படிக்க வசதி இல்லாமல் படிப்பை நிறுத்தினர்.
நந்தினி மாத ஊதியத்துக்கு பணிக்கு செல்வதற்கு பதில், தாங்களே சுயமாக தொழில் துவங்க சகோதரர்கள் விரும்பினர். தங்களின் கிராமங்களில் கிடைக்கும் சிறு தானியங்களை கொண்டு வந்து, 'நந்தினி' என்ற பெயரில், பேக்கிங் செய்து விற்க துவங்கினர்.
ஆனால், இவர்களின் உற்பத்தியை, மார்க்கெட்டிங் செய்து, தொழிலில் முன்னேற பொருளாதார உதவி கிடைக்கவில்லை. நஷ்டம் ஏற்பட்டது; அதற்காக அவர்கள் மனம் தளரவில்லை. தமிழகத்தில் சாலை ஓரத்தில், பானையில் மோர் விற்பதை கண்ட இவர்கள், அதே தொழிலில் ஈடுபட முடிவு செய்தனர். மைசூரின் சித்தார்த் லே - அவுட்டில், புதிய மாவட்ட அலுவலக சாலை அருகே, சிறிதாக டெண்ட் போட்டனர். மோர், சிறுதானிய கஞ்சி, கேழ்வரகு கஞ்சி விற்க துவங்கினர்.
அதன்பின் இயற்கை பழ ரசங்களையும் விற்றனர். அதிக சுவையுடன், தரமாகவும் இருந்ததால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 2,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரைசம்பாதிக்கின்றனர்.
முதுகெலும்பு சகோதரர்கள் கூறியதாவது:
விவசாயியே இந்நாட்டின் முதுகெலும்பு. அவர்கள் விளைவிக்கும் சிறு தானியங்களை வாங்கி, கஞ்சி தயாரித்து விற்கிறோம். மோர், கேழ்வரகு கஞ்சி, பழ ரசங்களும் விற்கிறோம். எந்த விதமான ரசாயனமும் இல்லாமல், இயற்கையான முறையில் வீட்டில் தயாரிக்கிறோம். இவைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது என்பதால், பலரும் வாங்கி அருந்துகின்றனர்.
எங்களுக்கும் வியாபாரம் நன்றாக நடக்கிறது. கடனையும் அடைத்துள்ளோம். முதலில் நாங்கள் துவங்கிய தொழில் தோல்வியடைந்தது என்றாலும், அதையே மீண்டும் துவக்கி வெற்றி அடைந்துள்ளோம். நாங்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்துகிறோம். அரசு வேலையை எதிர்பாராமல், சுய தொழில் துவங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
