/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு பஸ் கட்டணம் ரூ.20 அதிகரிப்பு
/
மைசூரு பஸ் கட்டணம் ரூ.20 அதிகரிப்பு
ADDED : செப் 29, 2025 06:07 AM

மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து மைசூரு தசராவுக்கு செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் கட்டணம், 20 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்க 'சக்தி' திட்டம் அறிமுகம் செய்யப்பட் உள்ளன. பெண்களிடமும் வரவேற்பு பெற்றது. ஆனால், நடப்பாண்டு, பஸ் கட்டணத்தை 15 சதவீதம் அரசு உயர்த்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மைசூரு தசராவை ஒட்டி, உள்ளூர் மட்டுமின்றி, அண்டை மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுற்றுலா தலங்களும் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், மாநிலத்தின் பிற மாவட்டத்தில் இருந்து மைசூருக்கு செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் அனைத்து வகையான பஸ்களிலும், டிக்கெட் கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
உதாரணமாக பெங்களூரிலிருந்து மைசூரு செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., எக்ஸ்பிரஸ் பஸ்சில் 170 ரூபாயில் இருந்து 190 ரூபாய்; 'நான் ஸ்டாப்' பஸ்சில் 210 ரூபாயில் இருந்து 230 ரூபாய்; ராஜஹம்சா பஸ்சுக்கு 270 ரூபாயில் இருந்து 290 ரூபாய்; ஐராவதா பஸ்சுக்கு 430 ரூபாயில் இருந்து 450 ரூபாய்; ஐராவதா கிளப் வகுப்பு பஸ்சுக்கு 440 ரூபாயில் இருந்து 460 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, பயணியர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் கூறுகையில், 'கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் பஸ் கட்டணத்தை உயர்த்தியது பயணியர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு கட்டணத்தை உயர்த்துவது சரியல்ல. இவ்வேளையில் பஸ் கட்டணத்தை குறைத்திருக்க வேண்டுமே தவிர, அதிகரித்திருக்க கூடாது' என்றனர்.