ADDED : ஜூலை 30, 2026 11:08 PM

- நமது நிருபர் -:
தசரா விழாவை ஒட்டி, மைசூரு சாமுண்டி விஹார் விளையாட்டு மைதானத்தை, இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு துறை கமிஷனர் அனுசேத் நேற்று ஆய்வு செய்தார்.
இந்தாண்டு தசரா விழா, அக்டோபரில் நடக்கிறது. இதற்காக, 17 தசரா துணை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விளையாட்டு துணைகுழுவினருடன் கமிஷனர் அனுசேத், மைசூரு நசர்பாத்தில் உள்ள சாமுண்டி விஹார் விளையாட்டு மைதானத்தை நேற்று ஆய்வு செய்தார்.
மைதானத்தில் விளையாட்டு வீரர்களுக்கு எந்த குறையும் இருக்காத வகையில், தசரா துவங்குவதற்குள் மைதானத்தை தயார்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன் பின், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதிக்கு சென்ற அவர், அங்கிருந்த வீராங்கனைகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின், அவர் கூறியதாவது:
மாணவர்கள் விளையாட்டு மட்டுமின்றி, படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வீர்கள்.
விளையாட்டில் மாணவர்கள் வெற்றி பெற, நல்ல பயிற்சியும், மனநிறைவான உணவும் இருந்தால் போதும். அரசு விதித்துள்ளபடி அதிகாரிகள், வீரர் - வீராங்கனைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
பரிமாறப்படும் உணவின் தரம் அல்லது அளவில் எந்த குறைபாடும் ஏற்படக்கூடாது. உணவு பட்டியலை, அட்டவணைப்படி பின்பற்ற வேண்டும்.
அறிவியல் விளையாட்டு பயிற்சி மையத்தில், வீரர்கள் தங்கள் உடல் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு உடல் பிரசோதனைகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
