உரிமம் இல்லாத உணவகங்களுக்கு பூட்டு மைசூரு மாநகராட்சி நடவடிக்கை
உரிமம் இல்லாத உணவகங்களுக்கு பூட்டு மைசூரு மாநகராட்சி நடவடிக்கை
ADDED : ஜூன் 20, 2026 10:51 PM
மைசூரு: தட்டகள்ளியில், பார் அண்ட் ரெஸ்டாரென்டில் பற்றிய தீ விபத்தில் இருவர் பலியான சம்பவத்துக்கு பின், எச்சரிக்கை அடைந்த மைசூரு மாநகராட்சி அதிகாரிகள், உரிமம் பெறாமல் சட்ட விரோதமாக செயல்படும் உணவகங்கள் மீது, நடவடிக்கை எடுக்கின்றனர்.
மைசூரு நகரின், தட்டகள்ளியில் உள்ள மது அருந்தும் கூடத்துடன் கூடிய உணவகத்தில், ஜூன் 15ம் தேதியன்று மதியம், காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில், இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
சம்பவத்துக்கு பின், போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்த போது, உரிமம் பெறாமல் அந்த உணவகம் இயங்கியதும், அங்கு தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததும் தெரிந்தது.
இது தொடர்பாக, மைசூரு மாவட்ட கலெக்டர் லட்சுமிகாந்தரெட்டி, நேற்று முன்தினம் காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு சாதனங்கள் இல்லாத, உரிமம் இல்லாத மதுபான கூடங்கள் மற்றும் உணவகங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதன்படி, மைசூரு மாநகராட்சி அதிகாரிகள், நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அந்நகரில் பல உணவகங்கள் உரிமம் பெறாமல் இயங்குவதும், தீ பாதுகாப்பு சாதனங்கள் அங்கு இல்லாததும் தெரிந்தது. மேலும், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் இருந்தன.
சில உணவகங்களில் துாய்மை இல்லை. இதையடுத்து, ஆந்திரா ருசிலு ரெஸ்டாரென்ட், லீ சிரா ரெஸ்டாரென்ட், அம்பரா ரெஸ்டாரென்ட் உட்பட, ஒன்பது உணவகங்களுக்கு பூட்டு போட்டனர். 'நோட்டீஸ்' அளித்து, விளக்கம் கேட்டுள்ளனர்.
