/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு ஜம்பு சவாரியில் 11,600 இருக்கைகள் குறைப்பு
/
மைசூரு ஜம்பு சவாரியில் 11,600 இருக்கைகள் குறைப்பு
ADDED : ஆக 18, 2025 11:19 PM
மைசூரு : பெங்களூரு ஆர்.சி.பி., வெற்றி விழா கொண்டாட்ட சம்பவம் எதிரொலியாக, நடப்பாண்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் விஜயதசமி அன்று நடக்கும் ஜம்பு சவாரியின் போது, 11,600 பார்வையாளர்கள் இருக்கைகள் குறைக்கப்பட்டு உள்ளன.
மைசூரு தசரா வி ழா செப்., 22 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை, 11 நாட்கள் நடக்கிறது. தசரா நிறைவு நாளான விஜயதசமி அன்று, அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை, 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை சுமந்தபடி யானைகள் ஊர்வலம் நடக்கும்.
இதை பார்க்க, அரண்மனை வளாகத்தில், 2023ல் 38,000 பார்வையாளர்கள் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. கடந்தாண்டு, 59,600 இருக்கைகளாக அதிகரிக்கப்பட்டிருந்தன.
நடப்பாண்டு கூடுதலாக இருக்கைகள் போட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம், பெங்களூரில் ஆர்.சி.பி., வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சுதாரித்து கொண்ட மாநில அரசும், போலீஸ் துறையும், அதிகளவில் கூட்டம் கூடுவதற்கு சில வழிமுறைகளை அமல்படுத்தியது. இதன்படி, எஸ்.ஓ.பி., எனும் நிலையான செயல்படும் செயல்முறையை, மாநில போலீஸ் துறை அமல்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் சித்தாமையா தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில், விஜயதசமி அன்று அரண்மனை வளாகத்தில், கடந்தாண்டை விட, 11,600 இருக்கைகள் குறைத்து, 48 ஆயிரம் இருக்கைகள் மட்டும் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி.,க்களுக்கான இருக்கைகளும் குறைக்கப்பட்டு உள்ளன.