/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தமிழ் சங்க முப்பெரும் விழா கோலாகலம்
/
மைசூரு தமிழ் சங்க முப்பெரும் விழா கோலாகலம்
ADDED : ஜூலை 07, 2025 07:10 AM
மைசூரு : மைசூரு தமிழ் சங்கம் சார்பில் நேற்று முப்பெரும் விழா, கோலாகலமாக நடந்தது.
மைசூரு மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., 2ம் ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவ - மாணவியருக்கு பாராட்டு, தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையிலான கலை நிகழ்ச்சி.
சிறு தொழில் செய்யும் தமிழ் குடும்பத்தினரின் பொருட்களை சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா நேற்று மைசூரு தமிழ் சங்கம் சார்பில், நகர வட்ட சாலையின் பைதிவே ஹோட்டலில் நடந்தது. மைசூரு தமிழ் சங்க தலைவர் எஸ்.பிரான்சிஸ் வரவேற்புரை ஆற்றினார்.
மண்ணின் வளர்ச்சி
திருப்பூர் தமிழ் இலக்கிய சங்கத்தின் தலைவர் அனிதா கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
தமிழர்கள் எங்கு சென்றாலும், யாரையும் தாழ்த்தி பேச மாட்டார்கள். பிழைக்க வழி இல்லாமல், தமிழர்கள் இங்கு வரவில்லை. உழைப்பதற்காக வந்தவர்கள். இந்த மண்ணின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். தமிழர்கள் மதம், இனம், ஜாதி பாகுபாடின்றி அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர்கள்.
சமீபத்திய காலத்தில், அதிகாரம் மிக்க ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட குடிமை பணிகளுக்கு தமிழர்கள் வருவது குறைந்துள்ளது. மாணவர்கள் இப்போதே இலக்கை நிர்ணயித்து, அதிகாரம் மிக்க பதவிகளுக்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்வி ஆலோசகர் ராம்குமார் பேசுகையில், ''கடைசி மூச்சு இருக்கும் வரை கற்று கொண்டே இருக்கலாம். கல்வி தான் ஒரு மனிதனை சமூகத்தில் உயர்ந்தவனாக அடையாளப்படுத்தும். படித்தவர்களுக்கு எங்கு சென்றாலும் தனி மதிப்பு உண்டு,'' என்றார்.
ரொக்க பரிசு
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., 2ம் ஆண்டு வகுப்பில் அதிக மதிப்பெண் மற்ற 57 மாணவர்கள் ரொக்க பரிசு, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, முறையே 5,001, 3,001, 2,001 மற்றும் மற்ற மாணவர்களுக்கு தலா 1,001 ரூபாய் ரொக்க பரிசு வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.
வினாடி வினா, லெமன் அண்ட் ஸ்பூன், இசை நாற்காலி உட்பட பல்வேறு போட்டிகளில், 5 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை அள்ளினர்.
தமிழ் பள்ளி
மைசூரு தமிழ் சங்க செயலர் வெ.ரகுபதி, நன்றி கூறினார். மைசூரு வாணி விலாஸ் சாலையில் உள்ள நகரின் ஒரே தமிழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு, சங்க தலைவர் பிரான்சிஸ் திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்தினார். குலுக்கல் முறையில் வென்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அசைவ உணவுடன் விழா கோலாகலமாக நிறைவு பெற்றது. கலை நிகழ்ச்சிகளை மதுபாலன் குழுவினர் நடத்தி, அனைவரது பாராட்டையும் பெற்றனர்.
விழாவில், சாம்ராஜ்நகர் தமிழ் சங்க தலைவர் சின்னசாமி, செயலர் ஜெகதீசன்; ஹுன்சூர் தமிழ் சங்க செயலர் நாகேந்திரன்; ஹனுார் தமிழ் சங்க தலைவர் விஷ்ணுகுமார், செயலர் விஜயகுமார்; கொள்ளேகால் தமிழ் சங்க இணை செயலர் கந்தசாமி; ஹெச்.டி.கோட்டே தமிழ் சங்க தலைவர் பழனிசாமி.
முன்னாள் தலைவர்கள் நகுல்சாமி, பெரியசாமி; குடகு காவிரி தமிழ் சங்க தலைவர் மைக்கேல், பொருளாளர் வேலு; குஷால்நகர் தமிழ் சங்க செயலர் சிவகுமார் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழர்களுக்கு அழைப்பு
மைசூரு தமிழ் சங்கம் தத்தெடுத்து நடத்தி வரும், வாணி விலாஸ் சாலையில் உள்ள அரசு தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியை வள்ளி கூறுகையில், ''மைசூரு நகரில் ஒரே தமிழ் பள்ளி மட்டுமே உள்ளது. கடந்தாண்டு 20 மாணவர்கள் இருந்த நிலையில், இந்தாண்டு 15 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். 1ம் வகுப்பு முதல், 7ம் வகுப்பு வரை தமிழ் வழியில் நடத்தப்படும் இப்பள்ளியில், மைசூரில் உள்ள தமிழர்கள், தங்கள் பிள்ளைகளை சேர்த்து தமிழ் பள்ளியை காக்க வேண்டும்,'' என்றார்.
மொபைல் போன் வேண்டாம்
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் போன்களை கொடுக்காமல், தங்கள் எதிரில் தேவையான போது, தேவையானவற்றை பயன்படுத்த மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
பிரான்சிஸ்,
தலைவர், மைசூரு தமிழ் சங்கம்