ADDED : பிப் 26, 2026 06:33 AM
தேவனஹள்ளி: பெங்களூரு அருகே, பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று உடலை எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி டவுனில் உள்ள ஸ்வர்ணத்தி என்ற ஹோட்டலின் பின்பக்கம் சாக்கடை கால்வாய் ஓடுகிறது. நேற்று காலை ஹோட்டல் ஊழியர் அங்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவல் அறிந்த தேவனஹள்ளி போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், நான்கு நாட்களுக்கு முன்பே பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து மர்மநபர்கள் கொன்றதும், உடலை இங்கு கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததும் தெரிந்தது.
கொலையான பெண்ணுக்கு 40 முதல் 45 வயது இருக்கும் என்று போலீசார் கூறுகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக, வடகிழக்கு பிரிவு டி.சி.பி., மிதுன்குமார் கூறி உள்ளார். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
