ADDED : ஏப் 18, 2026 05:58 AM
பனசங்கரி: தங்க நகைக்கடை உரிமையாளர், கழிப்பறைக்கு சென்று வருவதற்குள், கடைக்குள் புகுந்த மர்மநபர், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்றார்.
பெங்களூரின் மூகாம்பிகா நகரில் வசிப்பவர் மஞ்சுநாத், 52. இவர், பனசங்கரியில் தங்க நகைக்கடை நடத்துகிறார். கடையில் இருந்த மஞ்சுநாத், மதியம், 3:30 மணியளவில் கடையின் அருகே அங்கன்வாடியில் உள்ள கழிப்பறைக்கு சென்றிருந்தார். கடையை திறந்து வைத்து விட்டு சென்றிருந்தார்.
வெறும் மூன்று நிமிடங்களில் திரும்பினார். அப்போது மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து தங்கநகைகளை திருடிக் கொண்டிருந்தார். உரிமையாளரை கண்டதும் அந்த நபர், நகைகளுடன் வெளியே காத்திருந்த கூட்டாளியின் பைக்கில் ஏறி தப்பியோடி விட்டார். அவர்களை பிடிக்க மஞ்சுநாத் விரட்டி சென்றும் முடியவில்லை.
அதன்பின் கடைக்கு வந்து, நகைகளை சரி பார்த்த போது, 50 கிராம் எடையுள்ள இரண்டு வெள்ளி செயின்கள், 10 கிராம் எடையுள்ள மூன்று தங்க மூக்குத்திகள், 3,000 ரூபாய் ரொக்கம் திருடு போயிருந்தது.
இது தொடர்பாக, பனசங்கரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் அங்கு வந்து கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, மர்ம நபரின் உருவம் பதிவாகியிருந்தது. பைக் நம்பரை வைத்து, அவரை தேடி வருகின்றனர்.
