/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சக்ரேபைலு யானைகள் முகாமில் 2 குட்டிகளுக்கு பெயர் சூட்டல்
/
சக்ரேபைலு யானைகள் முகாமில் 2 குட்டிகளுக்கு பெயர் சூட்டல்
சக்ரேபைலு யானைகள் முகாமில் 2 குட்டிகளுக்கு பெயர் சூட்டல்
சக்ரேபைலு யானைகள் முகாமில் 2 குட்டிகளுக்கு பெயர் சூட்டல்
ADDED : ஆக 12, 2025 11:24 PM

ஷிவமொக்கா: யானைகள் தினமான நேற்று, சக்ரேபைலு யானைகள் முகாமில் பிறந்த இரண்டு குட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டது.
யானைகள் தினமான நேற்று, ஷிவமொக்காவின் சக்ரேபைலு யானைகள் முகாம் விழா கோலம் பூண்டிருந்தது. இதற்கு யானைகள் தினம் மட்டும் காரணமல்ல; அங்கு இரண்டு குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழாவும் காரணமாக அமைந்தது.
இவ்விழாவை ஒட்டி, குட்டிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பானுமதி என்ற யானைக்கு 2023ல் பிறந்த குட்டிக்கு, 'துங்கா' என்று வனத்துறை மூத்த அதிகாரி ஹனுமந்தப்பாவும், 2024ல் பிறந்த குட்டிக்கு, 'சாமுண்டி' என்று வனவிலங்கு துறை துணை அதிகாரி பிரசன்னா படாகரும் பெயர் சூட்டினர்.
பின் யானையின் காதில், மூன்று முறை அதன் பெயர்களை கூறினர். தொடர்ந்து யானைகளுக்கு பழங்கள், கரும்புகள் வழங்கப்பட்டன.
வனத்துறை துணை அதிகாரி பிரசன்ன படாகர் பேசியதாவது:
எப்போதும் பெண் யானைகள் தான், தன் குழுவை வழிநடத்தி செல்லும். தண்ணீர், உணவை கண்டுபிடிப்பது அதன் பொறுப்பாகும். பெண் யானைகள் தன் நினைவாற்றலை பயன்படுத்தி, எங்கு உணவு, தண்ணீர் கிடைக்கும் என்பதை கண்டு பிடிக்கும்.
இம்முகாம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், யானைகளுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள உறவை விளக்கவும், பள்ளி குழந்தைகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளன.
யானைகள் குறித்து, இணையவழி கருத்தரங்கு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த அதிகாரி ஹனுமந்தப்பா பேசுகையில், ''இம்முகாமுக்கு வருவோர், யானைகள் பற்றிய முழு தகவல்களும் தெரிந்து கொள்ளும் வகையில் குறிப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகளை பிடிக்கவும், வன விலங்குகளை மீண்டும் வனத்துக்குள் விரட்டி அடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சில யானைகள், மைசூரு தசரா ஜம்பு சவாரியிலும் ஈடுபடுத்தப்படுகின்றன,'' என்றார்.
துங்கா, சாமுண்டி ஆகிய குட்டி யானைகள் அறிமுகம் செய்யப்பட்டன.