கே.ஆர்.எஸ்., அணையில் தென்பட்ட நாராயண சுவாமி கோவில்
கே.ஆர்.எஸ்., அணையில் தென்பட்ட நாராயண சுவாமி கோவில்
ADDED : மே 16, 2026 03:33 AM

மாண்டியா: பழைய மைசூரு பகுதியின் உயிர் நாடியான, கே.ஆர்.எஸ்., அணையில் நீர் மட்டம் குறைந்ததால், அணையின் உப்பங்கழியில் புராதன நாராயண சுவாமி கோவில் தென்படுகிறது.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில், கே.ஆர்.எஸ்., அணை கட்டிய போது, இங்கிருந்த புராதன நாராயண சுவாமி கோவில், நீரில் மூழ்கியது.
அதற்கு முன்பே, கோவில் கர்ப்ப கிரஹத்தில் இருந்த நாராயண சுவாமியின் விக்ரகம் இடம் மாற்றப்பட்டது. கே.ஆர்.எஸ்., அணை அருகில் உள்ள, மஜ்ஜிகேபுரா கிராமத்தில் புதிதாக கோவில் கட்டி, அங்கு விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அங்கு தினமும் பூஜை நடக்கிறது.
கடந்த 2019ல், மழை பற்றாக்குறையால் அணையில் நீர் மட்டம் குறைந்த போது, உப்பங்கழியில் நாராயண சுவாமி கோவில் காட்சியளித்தது. பின், 2023ல் கோவில் தென்பட்டது.
கடந்த, 2024 மற்றும் 2025ல் நீர்மட்டம் அதிகம் இருந்ததால், கோவில் வெளியே தெரியவில்லை. இம்முறை கோடைக்காலத்தில், வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்ததால், கே.ஆர்.எஸ்., அணையில் நீர் மட்டம் குறைந்துள்ளது.
நாராயண சுவாமி கோவில் தென்படுவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினமும் கோவிலில் தரிசனம் செய்ய பலர் வருகின்றனர்.
