ADDED : ஜூலை 26, 2026 11:50 PM

- நமது நிருபர் -
கன்னட திரையுலக வரலாற்றில், இதுவரை யாரும் செய்யாத சாதனையை, துணை நடிகை ரூபஸ்ரீ வர்காடி செய்துள்ளார். இப்போதே முதன் முறையாக, உயரிய விருதான தேசிய விருது பெற்று, அவர் சார்ந்துள்ள, கடலோர மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கன்னட திரையுலகில், துணை நடிகைகள் பலர் மின்னி மறைந்துள்ளனர். தங்களின் நடிப்புத்திறனால், ரசிகர்களை கவர்ந்தனர். நுாற்றுக்கணக்கான படங்களில், மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனால் கன்னடத்தில், இதுவரை துணை நடிகைகளுக்கு, உயரிய விருதான தேசிய திரைப்பட விருது கிடைத்தது இல்லை. இப்போதே முதன் முறையாக, நடிகை ரூபஸ்ரீ வர்காடி, சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.
72வது தேசிய திரைப்பட விருதில், மித்யா திரைப்படத்தில் சிறப்பாக, துணை நடிகையாக நடித்ததற்காக, இவருக்கு விருது கிடைத்துள்ளது. இதனால், கடலோர மாவட்டத்துக்கு, பெருமை கிடைத்துள்ளது.
இதுகுறித்து, நடிகை ரூபஸ்ரீ வர்காடி கூறியதாவது:
தேசிய திரைப்பட விருதுக்கு, நான் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வந்தது. இதை கேட்டு என் இதய துடிப்பு அதிகமாகி, அதிர்ச்சி ஏற்பட்டது. மகிழ்ச்சியை தாங்க முடியாமல், பெருங்குரலில் கூச்சலிட்டேன். எனக்கு தேசிய அளவிலான விருது கிடைக்கும் என, நான் கனவிலும் நினைக்கவில்லை.
நான், 9ம் வகுப்பு படிக்கும் போது, நாடகத்தில் நடிக்க துவங்கினேன். என் முதல் ஊதியம், வெறும், 500 ரூபாய் தான். அதன்பின் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தேன். அதன் பின் திரையுலகில் நுழைந்தேன்.
கடந்த, 20 ஆண்டு கால, திரையுலக வாழ்க்கையில், துளு, கன்னடம், கொங்கனி உட்பட, பல்வேறு மொழிகளில், 85க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன்.
அனைத்திலும் துணை நடிகையாகவே நடித்திருந்தேன். கடலோர மாவட்டத்தை சேர்ந்த எனக்கு, தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
