/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் பட்டு போன மரங்களை அகற்றுவதில் அலட்சியம்! : உயிர்களை காவு வாங்க காத்திருப்பதால் மக்கள் கலக்கம்
/
பெங்களூரில் பட்டு போன மரங்களை அகற்றுவதில் அலட்சியம்! : உயிர்களை காவு வாங்க காத்திருப்பதால் மக்கள் கலக்கம்
பெங்களூரில் பட்டு போன மரங்களை அகற்றுவதில் அலட்சியம்! : உயிர்களை காவு வாங்க காத்திருப்பதால் மக்கள் கலக்கம்
பெங்களூரில் பட்டு போன மரங்களை அகற்றுவதில் அலட்சியம்! : உயிர்களை காவு வாங்க காத்திருப்பதால் மக்கள் கலக்கம்
ADDED : மே 04, 2025 11:24 PM

பெங்களூரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, குளுகுளு சூழலுக்கு பெயர் போன நகரமாக இருந்தது. இதற்கு காரணம் நகரில் எங்கு பார்த்தாலும், மரங்கள் அதிகமாக இருந்தது தான். ஆனால் மெட்ரோ, சாலை விரிவாக்க பணிகளால், மரங்கள் வெட்டப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாநகராட்சியின் வனத்துறை, நகரில் உள்ள, மரங்களை பராமரித்து வருகிறது. நகரில் எத்தனை மரங்கள் உள்ளது என்று, கடந்த ஆண்டு டிசம்பரில் மாநகராட்சி கணக்கெடுக்க துவங்கியது. கடந்த ஜனவரி மாதம் வெளியான அறிக்கையில், நகரின் 8 மண்டலங்களில் இதுவரை எடுத்த கணக்கெடுப்பில் 2,86,780 மரங்கள் உள்ளதாகவும், இன்னும் கணக்கெடுப்பு நடத்த வேண்டி உள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது.
பருவமழை
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழை காலத்தின் போது, பட்டு போன மரங்கள் விழுந்து, பொதுமக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 1ம் தேதி இரவு பெய்த கனமழையால் கத்ரிகுப்பே பகுதியில், ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்ததில் டிரைவர் மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
நகரின் பல இடங்களில் பட்டு போன நிலையில் காட்சி அளிக்கும் மரங்கள், எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் அந்த மரங்களின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எந்த நேரத்தில் மரம் சாய்ந்து விழுமோ என்று, ஒரு வித அச்சத்துடன் தான் பயணம் செய்கின்றனர்.
இம்மாத இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரம், கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்குள் பட்டு போன மரங்களை வெட்டி அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பட்டு போன மரங்களை வெட்டும் விஷயத்தில், மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
அதிகார பசி
கடந்த மாதம், பெங்களூரில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இதனை பயன்படுத்தி கொண்டு, பட்டு போன மரங்களை வெட்டி இருக்கலாம். ஆனால், அதற்கான முயற்சியில் மாநகராட்சி ஈடுபடவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி பட்ஜெட்டில், பட்டு போன மரங்களை வெட்டி அகற்ற நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியை அதிகாரிகள் என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை.
நகரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் 30க்கும் மேற்பட்ட மரங்கள், 150 மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. உயிரிழப்பு, வாகனங்கள் சேதம் அடைந்த போதிலும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மாநகராட்சி வெறும் அறிக்கை மட்டும் தான் வெளியிட்டது. பட்டு போன மரங்களை வெட்டி அகற்றுவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது நகரவாசிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதிகார பசியால் பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தாமல் உள்ளனர். 'ஏற்கனவே நகரில் உள்ள சாலை பள்ளங்களால் நிறைய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. இப்போது பட்டு போன மரங்களால் எந்த நேரத்தில் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயமாக உள்ளது' என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சாலையோரம் இருக்கும் மரங்களை கடந்து செல்லும், வாகன ஓட்டிகள் வேகமாக செல்ல தான் பார்க்கின்றனர். மழை பெய்வதால் குடிநீர் பிரச்னை ஏற்படாது என்று, ஒரு பக்கம் மக்கள் சந்தோஷமாக இருந்தாலும், சாலை பள்ளங்கள், காய்ந்த மரங்களை நினைத்து இன்னொரு பக்கம் பீதியிலும் உள்ளனர்.