சூட்கேசில் மூதாட்டி உடல் பக்கத்து வீட்டு வாலிபர் கைது
சூட்கேசில் மூதாட்டி உடல் பக்கத்து வீட்டு வாலிபர் கைது
ADDED : ஜூலை 22, 2026 11:27 PM

கும்பலகோடு: நகைக்காக மூதாட்டியை கொன்று உடலை ஏரியில் வீசிய, வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு கும்பலகோடு அருகே ராமோஹள்ளியில் வசித்தவர் ஜெயம்மா, 61. கடந்த 15ம் தேதியில் இருந்து மாயமானார்.
நேற்று முன்தினம் ராமோஹள்ளி கிராமத்தில் உள்ள திம்மப்பன ஏரியில், சூட்கேசில் மிதந்த ஜெயம்மாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவரை யாரோ கொலை செய்து, உடலை சூட்கேசில் அடைத்து வீசியது தெரிந்தது.
இந்நிலையில் ஜெயம்மா யார், யாருடன் கடைசியாக பேசினார் என்று போலீசார் விசாரித்தனர். உறவினர் ஒருவருடன் பேசியது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்த போது, ஜெயம்மாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ககன், 21 என்பவரின், மொபைல் போனில் இருந்து தன்னை அழைத்ததாக கூறினார்.
சந்தேகம் அடைந்த போலீசார் ககனிடம் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. ஜெயம்மாவை கொலை செய்ததை ஒப்பு கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி நிறைய பணத்தை இழந்த ககன், ஜெயம்மா அணிந்திருந்த நகைகள் மீது கண் வைத்தார். கடந்த 15ம் தேதி ஜெயம்மா வீட்டிற்கு சென்ற ககன், ஜெயம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று நகைகளை கொள்ளை அடித்துள்ளார். பின், ஜெயம்மாவின் உடலை சூட்கேசில் அடைத்து, ஆட்டோவில் எடுத்து சென்று ஏரியில் வீசியது விசாரணையில் தெரிந்துள்ளது.
