/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அண்டை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை: காங்., விமர்சனம்
/
அண்டை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை: காங்., விமர்சனம்
அண்டை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை: காங்., விமர்சனம்
அண்டை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை: காங்., விமர்சனம்
ADDED : ஜூலை 03, 2025 05:11 AM

பெங்களூரு: “ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு, தலைமை தாங்கும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றிருக்கும் நிலையில், நம் அண்டை நாடுகள் நம் நாட்டுக்கு ஆதரவாக இல்லை,” என, கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா விமர்சனம் செய்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பை, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடான பாகிஸ்தான் பெற்றிருப்பது தீவிரமான விஷயம். ஆட்டு மந்தையை பாதுகாக்கும் பொறுப்பு, ஓநாய்க்கு வழங்கப்பட்டதற்கு சமம்.
பாகிஸ்தானுக்கு வாய்ப்பு கிடைப்பதை தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டார்.
இந்த விஷயத்தில் சிறிய நாடுகள் கூட, நமக்கு ஆதரவாக இல்லை. இலங்கைக்கு நிதி உதவி செய்த போதிலும், அவர்கள் நமக்கு ஆதரவாக இல்லை.
பஹல்காம் தாக்குதல் நடந்தபோது, நம் அண்டை நாடுகள் பாகிஸ்தானை ஆதரித்தன. இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய அண்டை நாடுகள் நமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடந்தபோது, அண்டை நாடுகளுடன் நல்ல உறவு இருந்தது.
கடந்த மாதம் சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில், பஹல்காம் தாக்குதலை பற்றிய பேச்சு புறக்கணிக்கப்பட்டது. நம் நாட்டின் சார்பில் கலந்து கொண்ட, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் ஏன் அமைதியாக இருந்தார்? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், என்ன செய்து கொண்டு இருக்கிறார்?
கடந்த 10 ஆண்டுகளில் பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்து 10,000 கோடி ரூபாயை, பிரதமர் மோடி செலவு செய்தது எதற்காக? பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று தெரிந்தும், பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.