ADDED : மார் 25, 2026 06:50 AM
எச்.ஏ.எல்.: மொபைல் போன்கள் திருடிய, நேபாள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு எச்.ஏ.எல்.,ல் வசிப்பவர் மோகன். ஆட்டோ டிரைவர். கடந்த, 20ம் தேதி ஹோட்டல் முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு உள்ளே சாப்பிட சென்றார். இந்த நேரத்தில் ஆட்டோவின் டாஸ்போர்ட்டை உடைத்த மர்ம நபர், மோகனின் மொபைல் போனை திருடிச் சென்றார்.
இதுகுறித்து மோகன் அளித்த புகாரில், எச்.ஏ.எல்., போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில், லக்கரேயில் வசிக்கும் நேபாள நாட்டை சேர்ந்த ரூபக் பாபு, 27 நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், மொபைல் போன்களை மட்டுமே குறி வைத்து அவர் திருடியது தெரியந்தது. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் ஆட்டோக்கள், லாரி, வாடகை கார்களின் டாஸ் போர்ட்டை உடைத்து, அதிலிருக்கும் மொபைல் போன்களை திருடி, முருகேஷ் பாளையாவில் உள்ள நண்பர் வீட்டில் பதுக்கி வைத்து இருந்தார். ரூபக்கிடம் இருந்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 64 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
