/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குப்பை அள்ளும் 'டெண்டர்' புதிய நிபந்தனைகள் விதிப்பு
/
குப்பை அள்ளும் 'டெண்டர்' புதிய நிபந்தனைகள் விதிப்பு
குப்பை அள்ளும் 'டெண்டர்' புதிய நிபந்தனைகள் விதிப்பு
குப்பை அள்ளும் 'டெண்டர்' புதிய நிபந்தனைகள் விதிப்பு
ADDED : ஜன 03, 2026 06:19 AM
பெங்களூரு: பெங்களூரில் குப்பை அள்ளுவதற்கு, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் புதிதாக டெண்டர் அழைத்துள்ளது. இதில் சில நிபந்தனைகள் விதித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் குப்பை அள்ள, 33 பேக்கேஜ்களில், டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. குப்பை டெண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், ஒப்பந்ததாரர்களுக்கு கடினமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஒப்பந்த விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
மார்க்கெட்டுகள், பூங்காக்கள் மற்றும் கட்டட கழிவுகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டினால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். புதிய விதிமுறையின்படி, 300 கிலோவுக்கும் குறைவான எடையுள்ள கட்டட கழிவை அப்புறப்படுத்துவதும், ஒப்பந்ததாரரின் பொறுப்பாகும்.
ஒப்பந்ததாரர்கள் டெண்டர் பெற்று, மூன்று மாதங்களுக்கு பின்னரும், எங்காவது பிளாக் ஸ்பாட்டுகள் தென்பட்டால், ஒவ்வொரு பிளாக் ஸ்பாட்டுக்கும், தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பணி நேரத்தில் 10 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிக்கு ஆஜராகாவிட்டால், அவர்களுக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
ஆட்டோ டிப்பர் ஓட்டுநர்கள் அல்லது குப்பை அள்ளுவோர் பணி நேரத்தில் மதுபானம் அருந்தினால், போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிந்தால், சட்டவிரோதமாக நபர்கள் பணியாற்றுவது தெரிந்தால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
புதிய நடைமுறையில் ஒப்பந்ததாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சேவை கட்டணத்தில், 80 சதவீதம் தொகை மட்டுமே வழங்கப்படும். 20 சதவீதம் தொகையை நிறுவனம் நிறுத்தி வைக்கும். இந்த 20 சதவீத தொகையில், அந்தந்த மாதம் விதிக்கப்படும் அபராத தொகையை பிடித்து கொண்டு, பாக்கி இருந்தால் மட்டுமே ஒப்பந்ததாரர்களுக்கு கிடைக்கும். ஒரு வேளை 20 சதவீதம் தொகையை விட, அபராதம் அதிகமாக இருந்தால், அடுத்த மாதம் பில் தொகையில், பிடித்தம் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

