அரசு ஊழியர்கள் இடமாற்றம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு
அரசு ஊழியர்கள் இடமாற்றம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு
ADDED : ஏப் 14, 2026 06:08 AM
பெங்களூரு: மாநில அரசு, 2026 - 27 ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் இடமாற்றத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை, நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
இம்முறை அரசு ஊழியர்கள் இடமாற்றம் செயல்பாட்டில் முழுமையான வெளிப்படை தன்மையை பேண, மாநில அரசு முடிவு செய்து உள்ளது. எனவே, 2026 - 27 ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் இடமாற்றத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை நேற்று அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
விண்ணப்பிக்கும் ஒவ்வொரு ஊழியரும், தாங்கள் செய்யும் பணி குறித்து விபரமாக தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட கோரிக்கைகள் மட்டுமின்றி, துறையின் நிர்வாக தேவைகளையும் முக்கிய அளவு கோலாக கொண்டு, இடமாற்றம் ஆணை வழங்கப்படும்.
இடமாற்றம் செயல்பாடுகள், ஏப்., 13 முதல் மே 31ம் தேதி வரை நடக்கும். விருப்பம் உள்ள, தகுதியான ஊழியர்கள், விண்ணப்பிக்கலாம்.
கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், கர்ப்பிணி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும்.
தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலை அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற காரணங்களுக்கு, விதிவிலக்கு அளிக்கப்படும்.
இடமாற்றம் செய்யப்படும் ஊழியர்கள், தங்களது பணிக்காலம் மற்றும் தற்போது வகிக்கும் பதவியின் தரத்துக்கு ஏற்ப, இடமாற்றம் படி, இதர அரசு சலுகைகள் பெற தகுதியானவர்களாவர்.
தகுதியான ஊழியர்கள், விண்ணப்பத்தையும், தேவையான ஆவணங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரபூர்வ இணையத்திலோ அல்லது அலுவலகத்திலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
