/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க புதிய சட்டம்
/
ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க புதிய சட்டம்
ADDED : ஏப் 10, 2025 05:13 AM

அமைச்சர் பரமேஸ்வர் தகவல்
மாண்டியா: “ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டங்களை கட்டுப்படுத்த, புதிய சட்டம் கொண்டு வரப்படும். இதுகுறித்து ஐ.டி., - பி.டி., துறை உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்,” என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாக உள்ளனர். படித்த இளைஞர்களே, இத்தகைய விளையாட்டுகளில் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து, கடனாளியாகி தற்கொலை செய்து கொண்ட உதாரணங்களும் உள்ளன.
இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த, புதிய சட்டம் அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மாண்டியாவில் நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்டத்தை கட்டுப்படுத்த, இதுவரை தெளிவான சட்டங்கள் இல்லை. எனவே ஆன்லைன் பெட்டிங் மற்றும் கேம்பிளிங் நடத்துவோருடன், நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினேன். இவற்றை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர, அவர்களும் சம்மதித்துள்ளனர்.
'ஆன்லைன் பெட்டிங்' மற்றும் கேம்ப்ளிங் நடத்த, எங்களுக்கு லைசென்ஸ் கொடுத்து அரசு சட்டம் கொண்டு வரட்டும். அதை நாங்கள் பின்பற்றுகிறோம் என, அவர்கள் கூறினர்.
புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து, ஏற்கனவே ஐ.டி., - பி.டி., துறை உட்பட, பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்.
கர்நாடகா முதலீட்டை ஈர்ப்பதில், ஜி.எஸ்.டி., செலுத்துவதில் மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. மாநிலத்தின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்கள் அரசு கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்கிறது என்பது, பா.ஜ.,வினருக்கு புரிந்துள்ளது.
ஐந்து வாக்குறுதித் திட்டங்களை செயல்படுத்த, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளோம். ஜாதி, மதம், கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான திட்டங்களை வழங்கியுள்ளோம்.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக திட்டங்களை அளித்துள்ளோம். 10 கிலோ அரிசி வழங்க, மத்திய அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஐந்து கிலோ அரிசியும், ஐந்து கிலோ அரிசிக்கான பணமும் வழங்குகிறோம்.
எங்கள் மீது மக்கள் ஆக்ரோஷமாக இருந்திருந்தால், இடைத்தேர்தலில் காங்கிரசை தோற்கடித்திருக்கலாம். அதன் மூலம் அவர்களின் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கலாம். மூன்று தொகுதிகளிலும் பா.ஜ., தோற்றது.
விலை உயர்வை கண்டித்து, பா.ஜ., போராட்டம் நடத்துவது துரதிர்ஷ்டவசமானது. விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் வரி பங்கை மத்திய அரசு சரியாக அளிக்கவில்லை. டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உயர்த்தியது ஏன்? இது பா.ஜ., - ம.ஜ.த.,வினருக்கு தெரியவில்லையா?
பத்ரா மேலணை திட்டத்துக்கு, மத்திய அரசு பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. ஒரு ரூபாயும் கொடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

