/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை: சிவகுமார் பேட்டி
/
மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை: சிவகுமார் பேட்டி
மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை: சிவகுமார் பேட்டி
மேகதாது அணைக்கு புதிய திட்ட அறிக்கை: சிவகுமார் பேட்டி
ADDED : நவ 19, 2025 09:07 AM

பெங்களூரு: “மேகதாது திட்டத்திற்கான புதிய விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையத்தின் பரிந்துரைகள், கருத்துகளின் அடிப்படையில், மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என, கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, துணை முதல்வரும், பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன துறை அமைச்சருமான சிவகுமார், காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகளுடன், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகளுடன், மேகதாது திட்டத்தை முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசித்து உள்ளோம். திட்டத்தின் முழுமையான விபரங்கள், திட்டத்தால் எவ்வளவு வனப்பகுதி மூழ்கடிக்கப்படும் என்பது பற்றிய தகவல்கள் இருக்க வேண்டும் என்று, அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்.
கனகபுரா அருகே ஹரோபெலேயில் மேகதாது திட்ட அலுவலகத்தை துவக்கி உள்ளோம். மாண்டியா - ராம்நகர் மாவட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மேகதாது திட்டத்திற்கான தலைமை அலுவலகம் துவங்க முடிவு செய்துள்ளோம். இந்த அலுவலகத்திற்கு தேவையான ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.
மேகதாது திட்டத்திற்காக இதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, புதிதாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் .
தற்போதைக்கு டில்லிக்கு செல்லும் திட்டம் என்னிடம் இல்லை. துமகூரு வரை மெட்ரோ சேவையை நீட்டிக்கும்படி, அம்மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் என்னிடம் வந்து கேட்டனர். சாத்திய கூறுகளை ஆராய முன்வந்துள்ளேன். எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய என்ன உள்ளது? யாராவது சந்திரனுக்கு செல்ல விரும்பினால், அது சாத்தியமா, இல்லையா என்பதை நாம் ஆராய வேண்டாமா?
பெங்களூரு அருகே 2வது விமான நிலையம் கட்ட, மூன்று இடங்களை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் என்ன முடிவு எடுப்பர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

