ADDED : மார் 18, 2026 06:24 AM

சிக்கமகளூரு: பல முறை போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிக்கு, போர்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தண்டனை விதிக்கப்பட்டது.
சிக்கமகளூரு மாவட்டம், கடூரு தாலுகாவின், பிசிலேஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரஞ்சித், 35. இவர் இருச்சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஒரு வழிப்பாதையில் சென்றது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது என, பல முறை போக்குவரத்து விதிகளை மீறினார்.
இது தொடர்பாக, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், சிக்கமகளூரு மாவட்ட நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையில் ரஞ்சித்தின் குற்றம் உறுதியானது. அவரும் தன் தவறை ஒப்புக்கொண்டார்.
நீதிமன்றமும் ஒரு நாள் முழுதும், பிரதான சாலையில் நின்று, போக்குவரத்து விதிகள் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதன்படி நேற்று காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை கடூரின், மல்லேஸ்வரா சதுக்கத்தில் சாலை நடுவில், இரண்டு கைகளிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நின்றிருந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, அவரை கண்காணிக்க, போலீசாரும் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தண்டனையை பொது மக்களும் வரவேற்றுள்ளனர். '500 ரூபாய், 1,000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு பதில், நாள் முழுதும் நிற்க வைத்தால், போக்குவரத்து விதிகள் பற்றிய பயம் ஏற்படும். தவறு செய்யாமல் எச்சரிக்கையாக இருப்பர்' என, கருத்து தெரிவித்துள்ளனர்.
