/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி விரைவில் திறப்பு
/
இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி விரைவில் திறப்பு
இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி விரைவில் திறப்பு
இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி விரைவில் திறப்பு
ADDED : ஜூலை 10, 2025 03:41 AM
பெங்களூரு: சிறார்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை உட்பட, அனைத்து நவீன சிகிச்சையும் அளிக்கும் வசதிகள் உள்ள, இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரைவில் திறக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக, இந்திராகாந்தி குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் சஞ்சய் கூறியதாவது:
நிமான்ஸ் அருகில் இந்திராகாந்தி குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்குள்ள வெளி நோயாளிகள் பிரிவில், கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் சராசரியாக 500க்கும் மேற்பட்ட சிறார்கள், பரிசோதனைக்கு வருகின்றனர்.
இதில் 80க்கும் மேற்பட்டோர், உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகின்றனர். ஆனால் அவசர சிகிச்சை உட்பட, அனைத்து வார்டுகளிலும் 450 படுக்கைகளே உள்ளன.
சில நேரங்களில் படுக்கை பற்றாக்குறை இருப்பதால், ஒரே படுக்கையில் இரண்டு சிறார்களுக்கு சிகிச்சையளித்த உதாரணங்களும் உள்ளன. சிகிச்சை தாமதமானதாக புகார்களும் வந்தன.
இதை கருத்தில் கொண்டு, இந்திரா காந்தி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படுகிறது. 2019ல் புதிய மருத்துவமனை கட்ட, மாநில அரசு நிதியுதவி வழங்கியது.
கடந்த 2021 செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக, பணிகள் தாமதமாகின. 100 கோடி ரூபாய் செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் மருத்துவமனை திறக்கப்படவுள்ளது.
புதிய மருத்துவமனை எட்டு மாடிகள், 450 படுக்கைகள் கொண்டதாகும். 8வது மாடியில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, 7வது மாடியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இருக்கும். 5வது மாடியில் 50 படுக்கைகள் கொண்ட பச்சிளம் குழந்தைகள் பிரிவு, 2வது 3வது 4வது, 5வது மாடிகளில் வார்டுகள் இருக்கும்.
முதலாவது மாடியில் வெளி நோயாளிகள் பிரிவு, எம்.ஆர்.ஐ., சிடி ஸ்கேன் வசதி இருக்கும். ஆய்வகங்கள் இருக்கும். தரைத்தளம் பார்க்கிங்குக்கு பயன்படுத்தப்படும்.
புதிய மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது, மருத்துவ ஊழியர்கள் நியமிப்பது குறித்து, மாநில அரசிடம் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. விரைவில் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.