/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்
/
காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்
காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்
காதல் திருமணம் செய்ததால் கடத்த முயற்சி போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம்
ADDED : ஜூன் 28, 2025 11:04 PM
பெங்களூரு: சினிமா பாணியில், அடியாட்களை வைத்து மகளை கடத்த தாயே முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசாரிடம் புதுமண தம்பதி தஞ்சம் புகுந்தனர்.
பெங்களூரு புறநகர், சூர்யநகரில் வசிப்பவர் திவ்யா, 26. இவரும், சஞ்சய், 30, என்பவரும் எட்டு ஆண்டுகளாக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர்.
இது திவ்யாவின் தந்தை சீனிவாஸ், 55, தாய் ஷோபா, 50, ஆகியோருக்கு பிடிக்கவில்லை. தாங்கள் முடிவு செய்யும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென மிரட்டினர்.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி, திவ்யா கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி, சஞ்சயை திருமணம் செய்து கொண்டார். மகளை காணவில்லை என, சூர்யநகர் போலீஸ் நிலையத்தில் ஷோபா புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்திய நிலையில் திவ்யாவும், சஞ்சயும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறினர்.
ஜிகனி அருகில் சஞ்சய் குடும்பத்தினருடன், திவ்யா வசிக்கிறார். இதையறிந்த ஷோபா, நேற்று முன் தினம் இரவு 10:00 மணியளவில், அடியாட்களுடன் அங்கு சென்றார். மகளிடம், “உன் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயதேவா மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். காரில் என்னுடன் வா,” என, மகளை அழைத்தார்.
ஆனால் திவ்யா, தாயுடன் செல்ல விரும்பவில்லை. கணவர் மற்றும் நாத்தனார் சிந்துவுடன் பைக்கில் வருவதாக கூறினார். அதன்படி மூவரும் பைக்கில் புறப்பட்டனர்.
அவர்களை பின்தொடர்ந்து காரில் தன் அடியாட்களுடன், ஷோபா சென்றார். சந்தாபுரா அருகில் பைக் மீது காரை மோதி, அவர்களை கீழே தள்ளினர்.
மகளை காரில் ஏற்றிச் செல்ல ஷோபா முயற்சித்தார். அவர்களிடம் இருந்து திவ்யா, சஞ்சய், சிந்து தப்பியோடி ஜிகனி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் போலீஸ் நிலையம் சென்றதால், ஷோபாவும், அடியாட்களும் தப்பிவிட்டனர்.
புதுமண தம்பதிக்கு பாதுகாப்பு அளித்த போலீசார், ஷோபாவையும், அடியாட்களையும் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கின்றனர்.
அடியாட்கள் தாக்குதலில், சஞ்சயின் காலில் அடிபட்டு, சிகிச்சை பெறுகிறார்.