ADDED : செப் 30, 2026 03:47 AM
புதிய தலைவர் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஆனேக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவண்ணா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது பதவி காலம் மூன்று ஆண்டுகள். இது குறித்து, அவர் கூறுகையில், ''ஏரிகள் மாசுபடுவதை தடுப்பதும், மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகப்படுத்தி, காற்று மாசடைவதை குறைப்பதில் முன்னுரிமை செலுத்துவேன். நகரில் பசுமையை ஊக்குவித்து, திடக்கழிவு மேலாண்மை முறையை கையாளுவதை உறுதி செய்வேன்,'' என்றார்.
சவதிக்கு நோட்டீஸ் பெலகாவி அதானி பகுதியை சேர்ந்த ராஜு ஜமக்கண்டிகர் என்பவரை, அமைச்சர் லட்சுமணசவதி துாண்டுதலின் பேரில் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக, 2018ம் ஆண்டு அதானி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவானது. இது தொடர்பான வழக்கு, 4வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில், அக்டோபர் 9ம் தேதி லட்சுமணசவாதி நேரில் ஆஜராக வேண்டும் என, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மாணவியர் போராட்டம் கொப்பால் மாவட்டம், பி.ஹோசஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பஸ் நிறுத்தத்தில், நேற்று காலை வழக்கம் போல பள்ளி மாணவியர் நின்று கொண்டிருந்தனர். அப்போது, முண்டர்கியிலிருந்து கொப்பால் நோக்கி வந்த அரசு பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால், ஆத்திரமடைந்த அரசு பள்ளி மாணவியர், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவியது.
கிணறுகளில் கருவிகள் பெங்களூரில் உள்ள, 6,000 ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம், பம்ப் இயங்கும் நேரம் குறித்த தகவல்களை அறியும் வகையிலான அதிநவீன கருவியை அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் பொருத்தப்படுகிறது. பெங்களூரில் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, 16,000 ஆழ்துளை கிணறுகளில், ஏற்கனவே 1,800 கிணறுகளில் அதிநவீன கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கருவிகள் பொருத்துவதன் மூலம் நீர் மட்டம், பம்ப் சேதமடைவதை தடுக்க முடியும் என வாரிய தலைவர் மஞ்சுளா தெரிவித்து உள்ளார்.
ஆக்கிரமிப்பு அகற்றம் பெங்களூரு பனசங்கரி கோவிலுக்கு எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று ஏக்கர் நிலத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். பெங்களூரு தெற்கு மாநகராட்சியின் தலைமை அலுவலகம் கட்டுவதற்காக அரசு ஒதுக்கிய நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள், பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டன. இப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெற்கு மாநகராட்சி கமிஷனர் கே.என்.ரமேஷ் தெரிவித்தார்.
அமைச்சர் பாய்ச்சல் துங்கபத்ரா அணையில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுமதியின்றி நீர் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்விஷயத்தில் அதிகாரிகள் கூறும் காரணங்களை ஏற்க மாட்டேன் என கொப்பால் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவராஜ் தங்கடகி கூறினார்.
எஸ்.ஐ.டி., போலீசார் அதிரடி பெங்களூரு தெற்கு மாவட்டம் தொட்டேரியில் உள்ள பண்ணை வீட்டில் போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில், முக்கிய நபரான பிரசாந்த் ரஞ்சன்பாபு, நேற்று முன்தினம் எஸ்.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி, சென்னையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை, எஸ்.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர்.
உப்பு விழிப்புணர்வு உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதால் மனிதர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் உணவில் உப்பை எடுத்து கொள்வது தொடர்பான வழிகாட்டுதல்களை கொண்ட வர உள்ளதாக, சுகாதார துறை அமைச்சர் காதர் நேற்று தெரிவித்தார்.
கான்ட்ராக்டர்கள் சங்கம் கடிதம் கர்நாடக அரசின் பல துறைகளில் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்த கான்ட்ராக்டர்களுக்கு விடுவிக்க வேண்டிய, 38,000 கோடி ரூபாயை உடனே விடுவிக்க வேண்டும். டெண்டர் விடுவதில் வெளிப்படைதன்மையை பேண வேண்டும் எனவும் முதல்வர் சிவகுமாருக்கு, கான்ட்ராக்டர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அமலாக்க துறைக்கு அனுமதி கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள, பா.ஜ., பிரமுகர் பசவராஜ் கன்னாலேயை, 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு, பெங்களூரு 4வது சி.சி.எச்., நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அமைச்சருக்கு கடிதம் கர்நாடகாவில் நிலவும் கடும் வறட்சியால் 18,748 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உதவி செய்ய வேண்டும் என்றும், மத்திய விவசாய துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானுக்கு, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அறிவியலுடன் தொடர்புடையதா? விவசாய குட்டையில் 100 கிராம் சோடியத்தை வீசி வெடிக்க செய்த பிக்பாஸ் பிரபலம் டிரோன் பிரதாப் மீது பதிவான வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சோடியத்தை வீசி வெடிக்க செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த சோதனை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பாடத்திட்டத்தில் உள்ள அறிவியல் பாடத்துடன் தொடர்புடையது என நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.
எப்.ஐ.ஆர்., பாயும் பெங்களூரு ஆசிரியர் தொகுதி உட்பட மேல்சபையில் காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான தேர்தல், அக்டோபர் 23ம் தேதி நடக்க உள்ளது. பெங்களூரு ஆசிரியர் தொகுதிக்கான தேர்தல் ஏற்பாடுகள் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெகதீஷ் தலைமையில் நேற்று பெங்களூரில் கூட்டம் நடந்தது.
அவர் பேசுகையில், ''வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியின் போது, தவறான தகவல்களை பதிவு செய்து வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யலாம். பெங்களூரு மத்திய மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள தகுதியுள்ள ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கு தனியாக அலுவலகம் அமைக்கப்படும்,'' என்றார்.
உடல் கண்டெடுப்பு ஹாசன் சென்னராயப்பட்டணாவை சேர்ந்த ராஜசேகரை, 27, பிரியங்கா, 24, எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். இருவரும் ஹேமாவதி கால்வாயில் பைக்கில் கடந்த 19ம் தேதி சென்றனர்.
அப்போது, பிரியங்கா திடீரென கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், எங்கள் மகளை ராஜசேகர் கொலை செய்ததாக பிரியங்காவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். பிரியங்கா உடலை போலீசார், தீயணைப்பு துறையினர் ட்ரோன் உதவியுடன் தேடினர். துமகூரு துருவகெரேவில் உள்ள கோலால் ஏரியில் பிரியங்கா உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
