போதை பொருள் விற்ற வழக்கில் நைஜீரியருக்கு ஜாமின் மறுப்பு
போதை பொருள் விற்ற வழக்கில் நைஜீரியருக்கு ஜாமின் மறுப்பு
ADDED : மே 28, 2026 02:35 AM
பெங்களூரு: போதை பொருள் விற்ற வழக்கில், கைதான நைஜீரியருக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்து உள்ளது.
பெங்களூரு பேகூர் போலீசார் போதை பொருள் விற்ற வழக்கில் நைஜீரியா நாட்டின் கிறிஸ்டியன் சோபோருசுக்வு என்பவரை கடந்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கிலோ மெத்தாம் பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் கேட்டு கிறிஸ்டியன் தாக்கல் செய்த மனுவை, விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இம்மனுவை, நீதிபதி ஸ்ரீஷானந்தா விசாரித்து வந்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், தன் மனுதாரரை போலீசார் சட்டவிரோதமாக கைது செய்து இருப்பதாகவும், அவருக்கு ஜாமின் வழங்க கோரியும் வாதிட்டார்.
அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், மனுதாரர் கைதாகும் போது அவரிடம் வணிக அளவிலான போதை பொருள் இருந்ததாக கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று தீர்ப்பு கூறுகையில், அரசு தரப்பு வாதத்தை ஏற்று கொண்டு கிறிஸ்டியனுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தார்.
மேலும் அவர், ''1 கிலோ போதை பொருளுடன் பிடிபடுவது எளிதான விஷயம் இல்லை. போலீஸ் பொய் வழக்கு பதிவு செய்துள்ளது என்று நம்ப ஆதாரங்களும் இல்லை,'' என்றும் கூறிய நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
