ADDED : மே 01, 2025 05:24 AM
சிக்கஜாலா: பெங்களூரில் நைஜீரியா நாட்டு பெண், கொலை செய்யப்பட்டு உள்ளார். உடலை சாலையில் வீசி சென்ற, மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூரு பெட்டதஹலசூரு சாலையில், வெறிச்சோடிய பகுதியில் நேற்று காலை, ஒரு பெண் இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிக்கஜாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார், இறந்து கிடந்த பெண்ணின் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மேற்கொண்டு நடத்திய விசாரணையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லோவெத், 30 என்று கண்டுபிடித்தனர். பெண்ணின் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி மர்மநபர்கள் கொன்றதும், வேறு எங்கேயோ வைத்து கொலை செய்து, உடலை இங்கு வீசி சென்றதும் தெரிந்தது.
அந்த பெண்ணை பற்றி, நைஜீரியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள, போலீஸ் நிலையங்களுக்கு, சிக்கஜாலா போலீசார் தகவல் கொடுத்து உள்ளனர். விசாரணை நடக்கிறது.