ADDED : ஜூன் 11, 2025 11:42 PM

கலபுரகி: ''மாநிலத்தில் தற்போதைக்கு அமைச்சரவை மாற்றி அமைப்பது அல்லது மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து, மேலிடம் ஆலோசிக்கவில்லை,'' என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சரவையை மாற்றி அமைப்பது, மாநில காங்., தலைவர் மாற்றம் பற்றி, கட்சி மேலிடம் தற்போதைக்கு ஆலோசிக்கவில்லை. அப்படி முடிவு செய்யும் போது, ஊடகங்களிடம் கூறுவோம்.
சின்னசாமி விளையாட்டு அரங்கில் நடந்த கூட்ட நெரிசல் அசம்பாவிதம், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆலோசித்தோம். கூட்ட நெரிசல் சம்பவம், காங்கிரஸ் உட்பட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது. வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல், முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி, முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் உத்தரவிட்டோம்.
பிரயாக்ராஜ் கும்பமேளாவில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் பலியான போது, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்தாரா. கும்பமேளாவில் நடந்த சம்பவம் குறித்து, நான் கேள்வி எழுப்பிய போது, அவர் என் மீது கோபமடைந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மறு ஆய்வு நடத்த வேண்டும் என, பல்வேறு சமுதாயங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். காந்தராஜ் ஆணையம் அளித்துள்ள ஆய்வறிக்கையை நிராகரிக்காமல், மறு ஆய்வு நடத்தும்படி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கூறினார்.