/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலாவில் 4 இடங்களில் தோண்டும் பணி; எதுவும் சிக்காததால் சாட்சி மீது சந்தேகம்
/
தர்மஸ்தலாவில் 4 இடங்களில் தோண்டும் பணி; எதுவும் சிக்காததால் சாட்சி மீது சந்தேகம்
தர்மஸ்தலாவில் 4 இடங்களில் தோண்டும் பணி; எதுவும் சிக்காததால் சாட்சி மீது சந்தேகம்
தர்மஸ்தலாவில் 4 இடங்களில் தோண்டும் பணி; எதுவும் சிக்காததால் சாட்சி மீது சந்தேகம்
ADDED : ஜூலை 31, 2025 07:38 AM

மங்களூரு, : தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும், மேலும் நான்கு இடங்களில் நேற்று தோண்டப்பட்டது. ஆனால் எலும்புக்கூடோ, சந்தேகப்படும்படியான பொருட்களோ சிக்கவில்லை. இதனால் புகார்தாரர் பொய் சொல்கிறாரா என, பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது.
தட்சிண கன்னடாவில் தர்மஸ்தலா நேத்ராவதி ஆற்றங்கரை, அதை சுற்றியுள்ள பகுதிகளில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களை புதைத்ததாக, தர்மஸ்தலாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலின் முன்னாள் துாய்மை பணியாளர் புகார் அளித்தார். அதன்படி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
புகார் அளித்தவரை, கடந்த 28ம் தேதி தர்மஸ்தலாவுக்கு எஸ்.ஐ.டி., குழுவினர் அழைத்துச் சென்றனர். அவர் அடையாளம் காட்டிய, 13 இடங்களில், 'மார்க்கிங்' செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் 12:30 மணிக்கு, முதல் இடத்தில் தோண்டப்பட்டது. எட்டு அடிக்கு மேல் தோண்டியும் எலும்புக்கூடோ, சந்தேகப்படும்படியான பொருட்களை சிக்கவில்லை.
பாதுகாப்பு பணி நேற்று 2வது நாளாக, தோண்டும் பணி நடந்தது. எஸ்.ஐ.டி., குழு அதிகாரிகள் அனுசேத், ஜிதேந்திர குமார் தயமா, புத்துார் உதவி கலெக்டர் ஸ்டெல்லா வர்க்கீஸ் தலைமையில், காலை 11:00 மணிக்கு, மார்க்கிங் செய்யப்பட்ட இரண்டாவது இடமான பங்களகுட்டாவில் தோண்டப்பட்டது.
தர்மஸ்தலா கிராம பஞ்சாயத்தின் 20 ஊழியர்கள் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 6 அடி ஆழம், 5 அடி அகலத்தில் தோண்டியும் எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது இடத்திலும் தோண்டப்பட்டது. அங்கும் 6 அடி ஆழம், 5 அடி அகலத்தில் தோண்டியும் எதுவுமே சிக்கவில்லை. தொடர்ந்து, மார்க்கிங் செய்யப்பட்ட நான்காவது இடத்தில் தோண்டும் பணி நடந்தது.
அந்த நேரத்தில் புகார் அளித்தவர், 'எஸ்.ஐ.டி., குழுவினருடன், எஸ்.ஐ.டி., குழு தலைவர் பிரணவ் மொஹந்தியும் பள்ளம் தோண்டும்போது இங்கு இருக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.
இதுபற்றி பிரணவ் மொஹந்திக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மங்களூரில் இருந்து போலீஸ் ஜீப்பில் அவர் தர்மஸ்தலா விரைந்தார்.
இதற்கிடையில் நான்காவது இடமும் தோண்டப்பட்டு எதுவும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஐந்தாவது இடத்தை தோண்டுவதற்கு முன்பு, பிரணவ் மொஹந்தி தர்மஸ்தலா வந்தார். அந்த நேரத்தில் மழை பெய்ததால், 'ரெயின் கோர்ட்' அணிந்து, வனப்பகுதிக்குள் சென்று மார்க்கிங் செய்யப்பட்ட இடத்தில், தோண்டும் பணியை அவர் பார்வையிட்டார். அங்கும் எதுவுமே கிடைக்கவில்லை.
பின், பிரணவ் மொஹந்தி அளித்த பேட்டியில், ''வழக்கின் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. வரும் நாட்களில் விசாரணையை தீவிரப்படுத்துவோம்,'' என கூறிவிட்டு சென்றார்.
எதற்கும் தயார் நேற்று முன்தினம் ஒரு இடம், நேற்று நான்கு இடம் என, ஐந்து இடங்களில் தோண்டியும் எதுவும் கிடைக்காதால், புகார்தாரர் பொய் சொல்கிறாரா என்று, தர்மஸ்தலா மக்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கும், புகார்தாரர் கூறுவது உண்மையா என்று சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மதிய உணவு இடைவேளைக்கு அழைத்துச் சென்றபோது, 'நீங்கள் கூறிய இடங்களில் தோண்டி உள்ளோம்.
ஆனால் எதுவும் கிடைக்கவில்லை' என, எஸ்.ஐடி., அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினர்.
அதற்கு புகார்தாரர், 'நான் கூறியது பொய் இல்லை. பொய் கூறினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்பது எனக்கு தெரியும்.
'உண்மை கண்டறியும் சோதனை உட்பட எந்த விசாரணைக்கும் என்னை உட்படுத்துங்கள். எதற்கும் நான் தயார்' என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீர்மட்டம் உயர்வு மே லும், 'ஒன்று முதல் 8 இடங்கள், நேத்ராவதி ஆற்றின் கரையோரம் உள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு, நீர்மட்டம் உயர்வு காரணமாக எலும்புக்கூடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம். 9 முதல் 13 இடங்கள் ஆற்றங்கரையோரம் இல்லை. சாலையோரம் உள்ளது. அங்கு தோண்டினால் நிறைய எலும்புக் கூடுகள் கிடைக்கும்' என, புகார்தாரர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஆனால், 'வரிசைப்படி தான் செய்வோம்' என கூறி, எஸ்.ஐ.டி., மறுத்துள்ளது. இன்று மூன்றாவது நாளாக உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களில், தோண்டும் பணி நடக்க உள்ளது.