பணமும் இல்லை, ஊழியர்களும் இல்லை ஜி.பி.ஏ., தேர்தலுக்கு அவகாசம் தேவை
பணமும் இல்லை, ஊழியர்களும் இல்லை ஜி.பி.ஏ., தேர்தலுக்கு அவகாசம் தேவை
ADDED : ஏப் 26, 2026 12:36 AM
பெங்களூரு: ஜி.பி.ஏ., என்ற கிரேட்டர் பெங்களூரு ஆணைய தேர்தலை நடத்த, செப்டம்பர் வரை அவகாசம் அளிக்கும்படி கோரி, உச்சநீதிமன்றத்தின் கதவை தேர்தல் ஆணையம் தட்டியுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியாக இருந்த போது, 2020 செப்டம்பர், 10ல் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிவடைந்தது. அதன்பின் இதுவரை தேர்தல் நடக்கவில்லை. அதிகாரிகளின் நிர்வகிப்பில் தான் செயல்படுகிறது.
தற்போதுள்ள காங்கிரஸ் அரசு, பெங்களூரு மாநகராட்சியை, கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாற்றியுள்ளது. அத்துடன், ஐந்து நகராட்சிகளாக பிரித்து, வார்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஜி.பி.ஏ.,வுக்கு தேர்தல் தாமதமாவது தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடப்பாண்டு ஜூன் இறுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று, உத்தரவிட்டது.
ஆனால், நிர்ணயித்த கெடுவுக்குள், தேர்தலை நடத்த முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த பணிக்கு ஜி.பி.ஏ., உட்பட, பல்வேறு துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தமும் செய்ய வேண்டியுள்ளது.
ஜி.பி.ஏ., தேர்தலுக்கான செலவை, மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது. நிதி வழங்கும்படி அரசிடம் கோரிக்கை விடுத்தும், இன்னும் நிதி வரவில்லை. தேர்தலை நடத்த பணம் இல்லை, தேவையான ஊழியர்களும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில், தேர்தலை நடத்துவது கஷ்டம். எனவே ஜி.பி.ஏ., தேர்தலை நடத்த, செப்டம்பர், 30 வரை அவகாசம் அளிக்கும்படி, உச்சநீதிமன்றத்திடம் கர்நாடக மாநில அரசின் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
