ADDED : செப் 04, 2025 11:18 PM
பெங்களூரு,:''தர்மஸ்தலா விவகாரத்தில் என்.ஐ.ஏ., விசாரணைக்கு இப்போது அவசியமில்லை,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தர்மஸ்தலா மஞ்சுநாதர், அன்னப்ப சாமி, தன் பக்தர்களை தரிசனம் செய்ய அழைக்கின்றனர். யார் வேண்டும் என்றாலும் அங்கு சென்று தரிசனம் செய்யலாம். ஆனால் தர்மஸ்தலா வழக்கின் விசாரணை நடந்து வரும் நிலையில், அரசியல் செய்வதற்காக அங்கு செல்வது தவறு.
தற்போது வாகன பேரணி செல்லும் பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் ஏன், வழக்கிற்கு முன்பே அங்கு செல்லவில்லை. அவர்களை பார்த்து காங்கிரஸ் தலைவர்களும், தர்மஸ்தலாவுக்கு வாகன பேரணியை துவக்கி உள்ளனர். இது தவறு.
இவர்கள் தர்மஸ்தலா மீதான களங்கத்தை துடைக்க செல்கின்றனரா அல்லது, தங்கள் மீதான களங்கத்தை துடைக்க செல்கின்றனரா என்று தெரியவில்லை.
தர்மஸ்தலா வழக்கை எஸ்.ஐ.டி., சிறப்பாக விசாரிக்கிறது. ஆனாலும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர்கள் கேட்கின்றனர். எஸ்.ஐ.டி., விசாரணையில் தவறு இருந்தால், எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். வெளிநாட்டில் இருந்து பணம் வந்திருந்தால், அதுபற்றி கவனிக்க வேண்டியது மத்திய அரசு கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.