'முடா' மேல்முறையீட்டு வழக்கு முதல்வர் சித்துவுக்கு நோட்டீஸ்
'முடா' மேல்முறையீட்டு வழக்கு முதல்வர் சித்துவுக்கு நோட்டீஸ்
ADDED : மார் 27, 2026 05:32 AM

பெங்களூரு: 'முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உட்பட நான்கு பேரும் குற்றமற்றவர்கள்' என, லோக் ஆயுக்தா அளித்த அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஏற்று கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சித்தராமையா உட்பட நான்கு பேர், லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
முடா என்ற மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், வளர்ச்சி பணிகளுக்கு நிலம் கொடுத்தோருக்கு, 50:50 திட்டத்தின் கீழ் வீட்டுமனை வழங்குகிறது. இதில் 2,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்தன. முறைகேடு நடந்தது உண்மை என்று தெரிந்ததால், லோக் ஆயுக்தா விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரிக்கிறது.
முடாவில் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு, 56 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது, மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா நீதிமன்றத்தில் புகார் செய்தார். சித்தராமையா மீது விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கவர்னரிடமும் கோரிக்கை மனு அளித்தார்.
அறிக்கை ஏற்பு நீதிமன்ற உத்தரவின்படி சித்தராமையா, பார்வதி, அவரது சகோதரர் மல்லிகார்ஜுன், நில உரிமையாளர் தேவராஜ் மீது, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குபதிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் லோக் ஆயுக்தா அறிக்கை சமர்பித்தது. அதில், சித்தராமையா, பார்வதி உட்பட நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
லோக் ஆயுக்தா அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் சிநேகமயி கிருஷ்ணா மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், கடந்த ஜனவரி, 28ம் தேதி அளித்த தீர்ப்பில், லோக் ஆயுக்தா அறிக்கையை ஏற்று கொள்வதாக கூறினார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் கடந்த 23ம் தேதி சிநேகமயி கிருஷ்ணா மனுதாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சுனில் தத் யாதவ், ஆட்சேபனை தாக்கல் செய்ய சித்தராமையா, பார்வதி உட்பட 4 பேர், லோக் ஆயுக்தா மற்றும் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
