6 மாடி கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'
6 மாடி கட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்'
UPDATED : நவ 15, 2026 05:53 AM
ADDED : நவ 14, 2026 11:04 PM

பெங்களூரு: முறைப்படி அனுமதி பெறாமல், வரைபடத்துக்கு ஒப்புதல் இல்லாமல், ஆறு மாடிகள் கட்டப்பட்டதை லோக் ஆயுக்தா கண்டித்துள்ளது. இது தொடர்பாக, ஜி.பி.ஏ., மற்றும் பெஸ்காம் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பெங்களூரின் கல்யாண் நகரில் சட்டவிரோதமாக ஆறு மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்துக்கு அனுமதியோ, வரை படத்துக்கு ஒப்புதலோ பெறவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தது.
இதை தீவிரமாக கருதிய லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் பொறியாளர் அர்பிதா, பெஸ்காம் உதவி செயல் நிர்வாக பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் முனிராஜுவை வரவழைத்து, விசாரித்தனர்.
விசாரணையின் போது அனுமதி பெறாமல், விதிமீறலாக கட்டடம் கட்டப்பட்டதை, அர்பிதா ஒப்புக்கொண்டார். இந்த கட்டடத்துக்கு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால் கட்டட உரிமையாளர் நீதிமன்றத்தில், இடைக்கால தடையுத்தரவு பெற்று வந்து, மீண்டும் மின் இணைப்பை பெற்றதாக, பெஸ்காம் செயல் நிர்வாக பொறியாளர் வெங்கடேஷ், விசாரணையில் கூறியுள்ளார்.
அனுமதி பெறாமலும், வரைபடத்துக்கு ஒப்புதல் பெறாமலும் ஆறு மாடிகள் கட்டடம் கட்டியிருந்தும் ஜி.பி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததும், கட்டட லைசென்சை ஆய்வு செய்யாமல், பெஸ்காம் அதிகாரிகள் மின் இணைப்பு அளித்திருப்பதையும், லோக் ஆயுக்தா நீதிபதி கவனித்தார்.
இதையடுத்து, ஜி.பி.ஏ., மஹாதே வபுரா மண்டல கமிஷனர், கே.ஆர்.புரம் மண்டல தலைமை பொறியாளர், பெஸ்காம் வடக்கு மண்டல தலைமை பொறியாளர், ஹென்னூர் துணை பிரிவு உதவி செயல் நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளருக்கு விளக்கம் கேட்டு, லோக் ஆயுக்தா நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
