ADDED : ஜூலை 25, 2026 11:29 PM

பெங்களூரு: கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம், கொள்ளை உட்பட, 11க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விக்னேஷ் என்ற விக்கியை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரின் கெங்கேரியில் வசிப்பவர் ரவுடி விக்னேஷ், 35. இவர் கொலை முயற்சி, தாக்குதல், பாலியல் பலாத்காரம், கொள்ளை என, பல விதமான குற்றங்களில் தொடர்புள்ளவர். இதற்கு முன் பல வழக்குகளில், இவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் ஜாமினில் வெளியே வந்து, மீண்டும் குற்றங்களில் ஈடுபட துவங்கினார்.
சட்ட விரோத செயல்கள் மூலமாக, கெங்கேரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், மக்களிடையே பீதியை ஏற்படுத்தினார். சமுதாயத்தின் அமைதியை குலைத்தார். இவர் மீது, 11 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரை ஒடுக்கும்படி, பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர்.
ரவுடி விக்னேஷை குண்டர் தடை சட்டத்தில் கைது செய்யும்படி, பெங்களூரு நகர் போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் உத்தரவிட்டார். கெங்கேரி போலீசாரும் ரவுடியை, நேற்று காலை கைது செய்தனர்.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைத்தனர். பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது, கடுமையான சட்டம் பாயும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
