போதையில் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை பெங்களூரில் அதிகரிப்பு; : 39,000 வழக்குகள் பதிவு
போதையில் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை பெங்களூரில் அதிகரிப்பு; : 39,000 வழக்குகள் பதிவு
ADDED : ஜன 17, 2026 07:14 AM
பெங்களூரு: பெங்களூரில், மது குடித்து, வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது, போலீசாருக்கு தலைவலியாக உள்ளது. கடந்த, 2025ல் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 39,000 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெங்களூரில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
குறிப்பாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார், பல நடவடிக்கைகள் எடுத்தும் பயன் இல்லை.
போலீசார் சோதனையிட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்கின்றனர். அபராதம் வசூலிக்கின்றனர். எனினும், போதையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.
கடந்த, 2024ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2025ல் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர் கார்த்திக் ரெட்டி கூறியதாவது:
மதுபானம் அருந்தி, வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, போக்குவரத்து போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டுவருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி, குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக, கடந்த, 2024ம் ஆண்டில், 23,622 வழக்குகள் பதிவாகின. 2025ல், 38,919 வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த, 2024 உடன் ஒப்பிட்டால், 2025ல், 88 சதவீதம் கூடுதல் வழக்குகள் பதிவாகின. குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டுபிடிக்க, 'ஆல்கோமீட்டர்' வைத்து சோதிக்கின்றனர். குடித்திருப்பது தெரிந்தால், வழக்கு பதிவு செய்கின்றனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டி, போலீசிடம் சிக்கியவர்களில் 60 சதவீதம் பேர், 30 வயது முதல், 50 வயது வரை உள்ளவர்கள்.
குறிப்பாக, கோரமங்களா, ஒயிட் பீல்டு, கப்பன் பூங்கா, இந்திரா நகர் உட்பட பகுதிகளில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர் அதிகம்.
வரும் நாட்களில் இவர்கள் மீதான நடவடிக்கை, மேலும் தீவிரப்படுத்தப்படும்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோரால், மற்றவரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். தாங்களும் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு இது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்,
இவ்வாறு அவர்கூறினார்.
