/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.பி., சுதாகரின் பெயரை எழுதி வைத்து அதிகாரியின் கார் ஓட்டுநர் தற்கொலை
/
எம்.பி., சுதாகரின் பெயரை எழுதி வைத்து அதிகாரியின் கார் ஓட்டுநர் தற்கொலை
எம்.பி., சுதாகரின் பெயரை எழுதி வைத்து அதிகாரியின் கார் ஓட்டுநர் தற்கொலை
எம்.பி., சுதாகரின் பெயரை எழுதி வைத்து அதிகாரியின் கார் ஓட்டுநர் தற்கொலை
ADDED : ஆக 08, 2025 04:05 AM

சிக்கபல்லாபூர்: பா.ஜ., - எம்.பி., மற்றும் அவரது ஆதரவாளர்களின் பெயர்களை எழுதி வைத்துவிட்டு, மாவட்ட பஞ்சாயத்து தலைமை கணக்கு அதிகாரியின் கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார். இது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கபல்லாபூரின் பாபூஜி நகரில் வசித்தவர் பாபு, 32. இவர் சிக்கபல்லாபூர் மாவட்ட பஞ்சாயத்து தலைமை கணக்கு அதிகாரியின் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, அலுவலகத்தில் அவசர பணி இருப்பதாக கூறி, வீட்டில் இருந்து புறப்பட்டார்.
சிக்கபல்லாபூர் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகம் பின் பகுதியில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலை பணிக்கு வந்த ஊழியர்கள், இதை கவனித்து அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த சிக்கபல்லாபூர் ஊரக போலீசார், ஓட்டுநர் பாபுவின் உடலை மீட்டனர். தற்கொலைக்கு முன்பு, காரில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில் அவர், 'சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர், 2021ல் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.
அவரது ஆதரவாளர்கள் நாகேஷ் உட்பட, சிலர் எனக்கு அரசு வேலை கிடைக்க செய்வதாக நம்ப வைத்து, 40 லட்சம் ரூபாய் பணம் கேட்டனர். நான் பலரிடம் கடன் வாங்கி, 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். பாபு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நாகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.
பாபு குற்றம் சாட்டியுள்ளதால் சுதாகர் எம்.பி., ராஜினாமா செய்ய வேண்டுமென, காங்கிரசார் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, டில்லியில் எம்.பி., சுதாகர் அளித்த பேட்டி:
பாபு என்ற நபர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரது முகத்தை கூட பார்த்தது இல்லை. அவர் என் பெயரை ஏன் குறிப்பிட்டார் என்பதும், எனக்கு தெரியவில்லை.
அவர் சிக்கபல்லாபூரை சேர்ந்தவர் என்பதையும், மாவட்ட பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதையும், ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்.
அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறேன். அவரது தற்கொலை எனக்கு வருத்தம் அளிக்கிறது. என் வாழ்க்கையில் நான் அவரது முகத்தை பார்த்தது இல்லை. நான் இரண்டு முறை அமைச்சராக இருந்தேன்.
பலருக்கு உதவியுள்ளேன். வேலை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் பாபுவை பற்றி எனக்கு தெரியவில்லை.
நான் டில்லியில் இருந்து திரும்பிய பின், பாபுவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவேன். என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். இதன் பின்னணியில், அரசியல் சதி உள்ளது. காங்கிரசுக்கு ஒரு சட்டம், பா.ஜ.,வுக்கு ஒரு சட்டமா? பாபுவின் இறப்பை அரசியலாக்குவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.