/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டெங்கு அதிகரிப்பால் அதிகாரிகள் கலக்கம் 1,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு
/
டெங்கு அதிகரிப்பால் அதிகாரிகள் கலக்கம் 1,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு
டெங்கு அதிகரிப்பால் அதிகாரிகள் கலக்கம் 1,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு
டெங்கு அதிகரிப்பால் அதிகாரிகள் கலக்கம் 1,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு
ADDED : ஏப் 25, 2025 05:45 AM
பெங்களூரு: கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில், கோடை மழை பெய்து, வானிலை மாற்றம் ஏற்பட்டதால், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. நடப்பாண்டு 21,000க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது. 1,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது.
சமீப நாட்களாக பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. பகலில் வெயில், இரவில் மழை என, வானிலை மாறுவதால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்குவுக்கு காரணமான கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கின்றன.
32,000 பேர்
கடந்தாண்டு கோடை மழையின்மையால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, டெங்கு பரவியது. ஆண்டின் இறுதியில் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,000த்தை தாண்டியது. நடப்பாண்டு ஏப்ரலில் பெய்த மழையால், டெங்கு அதிகரிக்கிறது.
நடப்பாண்டில் ஏப்ரல் வரை, டெங்கு அறிகுறிகள் இருந்த 21,000க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இதில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் உறுதியானது.
ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கி உள்ளனர்.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தில் 2017ல், 17,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு உறுதியானது. 2020ல் இந்த எண்ணிக்கை குறைந்தது.
அதன்பின், டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஏறுமுகமாகிறது. 2024ல் 32,000க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். காய்ச்சலின் தீவிரத்தால் 16 பேர் உயிரிழந்தனர்.
எண்ணிக்கை
நடப்பாண்டு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், டெங்கு காணப்படுகிறது. பெங்களூரில் இவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. 2,361 பேரின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டது, இதில் 435 பேருக்கு டெங்கு உறுதியானது. துமகூரில் 73, கலபுரகியில் 51 பேர் உட்பட பல்வேறு மாவட்டங்களில், 1,000க்கும் மேற்பட்டோருக்கு நோய் உறுதியானது.
முந்தைய ஆண்டு டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், நடப்பாண்டு அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். காலி மனை, கட்டடங்கள், தண்ணீர் தொட்டி, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில், கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தண்ணீர் சேகரிக்கும் பாத்திரங்கள், தொட்டிகள், டிரம்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்திருப்பது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.