/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிரம்பிய மூன்று அணைகளால் அதிகாரிகள், விவசாயிகள் நிம்மதி
/
நிரம்பிய மூன்று அணைகளால் அதிகாரிகள், விவசாயிகள் நிம்மதி
நிரம்பிய மூன்று அணைகளால் அதிகாரிகள், விவசாயிகள் நிம்மதி
நிரம்பிய மூன்று அணைகளால் அதிகாரிகள், விவசாயிகள் நிம்மதி
ADDED : மே 26, 2025 12:58 AM

பெங்களூரு : கர்நாடகாவில், கோடை மழை வெளுத்து வாங்கியதால், பருவ மழை துவங்கும் முன்பே மூன்று அணைகள் நிரம்பின. விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சி தென்படுகிறது.
கடந்த சில வாரங்களாக, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதன் பயனாக பல அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது. தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பே, அணைகள் நிரம்புவதால் அரசும், விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஹாசன் மாவட்டத்தின் யகசி அணை, உத்தரகன்னடா மாவட்டத்தின் கத்ரா, ஷிவமொக்கா மாவட்டத்தின் காஜனுார் அணைகள் நிரம்பியுள்ளன. பேலுார் தாலுகாவின், சிக்கபாடகெரேவில் உள்ள யகசி அணைக்கு, எம்.எல்.ஏ., சுரேஷ் சமர்ப்பண பூஜை செய்தார். 3.60 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஷிவமொக்கா காஜனுார் அருகில் உள்ள துங்கா அணை, கர்நாடகாவில் மிகவும் சிறிய அணைகளில் ஒன்றாகும். இதன் அதிகபட்ச கொள்ளளவு 3.24 டி.எம்.சி., அணை முழு கொள்ளளவை எட்ட, இன்னும் சில அடிகள் மட்டுமே பாக்கியுள்ளன.
'மழை தொடர்வதால், எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும். துங்கா ஆற்றங்கரையோரப் பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆற்றங்கரை அருகில் யாரும் செல்ல வேண்டாம். கால்நடைகளை மேய விட வேண்டாம்' என, அணையின் செயல் நிர்வாக பொறியாளர் திப்பா நாயக் எச்சரித்துள்ளார்.
உத்தரகன்னடா கத்ரி அணையின் அதிகபட்ச கொள்ளளவு, 123.25 டி.எம்.சி., தற்போது அணை நிரம்பியதால், கத்ரா அணைக்கு உத்தரகன்னட மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, நேற்று முன் தினம் சமர்ப்பண பூஜை செய்தார்.
'அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது, யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படக்கூடாது' என, அவர் பிரார்த்தனை செய்தார்.
குடகின் தலக்காவிரி - பாகமண்டலா பகுதிகளில், கனமழை பெய்வதால், திரிவேணி சங்கமம் நிரம்பியுள்ளது. காவிரி, கன்னிகா, சுஜ்யோதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துங்கபத்ரா அணையிலும் நீர் மட்டம் அதிகரிக்கிறது.
ஆனால் மைசூரு பகுதிகளில், அவ்வளவாக மழை பெய்யாததால், கே.ஆர்.எஸ்., அணைக்கு நீர்வரத்து இல்லை. இதன் நீர்மட்டம் குறைந்து வருகிறது.